பக்கம்:கனிச்சாறு 7.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


189

‘அந்தமான் முரசு’ கிழமையிதழாக
மலர்ந்ததற்கு வாழ்த்து!


எந்தமிழ் மொழியின் ஏற்றம் கருதியும்
செந்தமிழ் இனத்தின் செழிப்பை நோக்கியும்
அந்தமான் முர’செனும் அருமைத் தமிழிதழ்
பன்னீ ராண்டாய்ப் பயன்பெற வுழைத்து
நன்னருங் கிழமை இதழாய், நாமெலாம்
மகிழ்வுற மலர்ந்தது; மனம்மிகக் குளிர்ந்தது!
திகழ்வுறும் அதன்ஒலி திசையெலாம் பரந்தது!

ஒப்பிலா நம்மொழி உயர்வுற் றோங்கவும்
எப்புடைத் தமிழரும் ஒருங்கே இணைந்தோர்
உரிமைத் தமிழகம் உறுதியாய்க் காணவும்
அருமை இதழாம் ‘அந்தமான் முரசு’
இந்நில வுருண்டையில் எங்கணும் ஒலிக்க!
என்னருந் தமிழருக் கினியதொண் டாற்றுக!

இலக்கணம் வழுவா திலக்கியம் இயற்றுக!
கலக்கமி லாமல் கருத்துகள் பொலிக!
எழலிலாத் தமிழருக் கெழுச்சி யூட்டும்
வழுவிலாத் தமிழின வரலாறு எழுதுக!

அடிமைத் தனத்தின் மிடிமை அகற்றுக!
குடிமைச் சிறப்பின் கொள்கைகள் நாட்டுக!
மொழி, இனம், நாடெனும் முப்படிக் கொள்கைக்கு
இழிவு வராமல் இராப்பகல் உழைக்க!

அந்தமிழ் இதழாம் ‘அந்தமான் முரசு’ம்
அந்தமான் முரசின் ஆசிரி யர், சுப.
சுப்பிர மணியனார் சொல்லும் செயலும்
தப்பிலா தியங்கித் தாழ்வுற்ற தமிழர்க்கு

வங்கக் கடலின் வரலாறு ஆகுக!
எங்கும் அவர்புகழ் ஏற்றம் பெறுகவே!

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/267&oldid=1447151" இலிருந்து மீள்விக்கப்பட்டது