பக்கம்:கனிச்சாறு 7.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


191

‘குறளும் பொருளும்’ நூலுக்கு
வாழ்த்துரை!


மறையரசன் வள்ளுவன்செய் திருநூ லுக்கு
மாண்புரைகள் விரிவுரைகள் பலர்வ குத்தார்!
நிறையரச உரைகளென ஓரி ரண்டை
நிறுப்பார்கள் பெரும்புலவோர்! பிறவற் றுள்ளே
குறையுரைகள் கறையுரைகள் பலவும் உண்டு!
கொள்கைகளை மக்கள்நலம் கருதி யிங்கே
இறையரசன் குறட்பொருளைப் பட்டினாலே
எடுத்தியம்பிப் பெருமைபெற்றார்; வாழ்த்துகின்றோம்!

உரைப்பாக்கள் பாநலமும் செழுஞ்சொற் கட்டும்
ஒட்பமுடன் தூய்தமிழும் செறிந்து நின்று,
வரைப்பாங்கு கொண்டிலங்கிக் கற்பா ருள்ளம்
வயப்படுத்தும் திறன்சான்று நிற்றல் கண்டோம்!
விரைப்பாரும் புனைவுலகில் புன்மை கூறும்
வெறுநூல்கள் பொலபொலென மொய்க்கும் போதில்
நிரைப்பாரும் அறநூல்கள் பேணு கின்ற
நிறைநெஞ்சப் புலமையினை வாழ்த்து கின்றோம்!

அடிமைமிகு காலத்தில் மதச்சார் பூட்டி
அன்றுரைத்த சிலவுரைகள் திருக்கு றட்கு
மிடிமைதரும் போக்குணர்ந்தே அறிவால் ஆய்ந்து
மேன்மைதரும் அறிவியற்குப் பொருந்து மாறு
குடிமைநலம் மேம்படுத்தும் உரைப்பா தந்தார்,
கொள்கைசேர் இறையரசன்! அவர்மு யற்சி
நொடிமையுற்றுக் கிடக்கின்ற தமிழினத்தின்
நோய்மைக்குத் தனிமருந்தாம்! வாழ்த்து கின்றோம்!

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/269&oldid=1447153" இலிருந்து மீள்விக்கப்பட்டது