பக்கம்:கனிச்சாறு 7.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உ௬

கனிச்சாறு ஏழாம் தொகுதி


58. இப்பாடலும் ‘தடா’க் கொடுஞ்சிறையில் இருக்கையில் எழுதப்பெபற்றதே.

59. ‘தடா’க் கொடுஞ்சிறையினின்று வந்தபின் 94ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 10ஆம் ஆண்டு நாளில் பாவலரேறு ஐயா அவர்களின் பிறந்த நாளன்று அன்பர்கள் பலரும் ஐயா அவர்களின் இல்லத்திற்கும், தென்மொழி அலுவலகத்துக்கும் வந்திருந்து மகிழ்ச்சி தெரிவித்தனர். (அதற்கு முந்தைய ஆண்டு பிறந்தநாளின்பொழுது ஐயா அவர்கள் ‘தடா’க் கொடுஞ்சட்டத்தின்கீழ் சிறையிலிருந்தார்கள்)

இம் மாநில மக்களின் அவல நிலை நீங்க, மக்கள் விடுதலைக்குப் பெரும்பணி ஆற்றுகிற நிலையில் தமக்குப் பிறந்தநாள் நினைவிலோர் பெருமையையும் இல்லை என்கிறார் பாவலரேறு.

60. தம் உள்ளமும், விளைவும் வெளிச்சமானதும் பொதுமையானதுமான நிலையில் தம்மின் மறைவு கதிரவனின் வீழ்ச்சி போன்றது - என்று தம்மைப்பற்றி தமிழ்ச்சிட்டுகளுக்குச் சொல்கிறார் பாவலரேறு ஐயா அவர்கள்.

61. என்னைப்பற்றி எழுதுகிற பேசுகிற நேரத்தில் மொழியை, இனத்தை, நாட்டை எண்ணுங்கள்; பேசுங்கள் என்கிறார் பாவலரேறு.

இப்பாடல் ஐயா அவர்களின் மறைவுக்குச் சில மாதங்களுக்கு முன்னர் எழுதப்பெற்றது.

62. காய்ச்சல் என்றும், உடல் சோர்வு என்றும் நெடிதாய்ப் படுத்திராத நம் அருந்தமிழ் ஐயா அவர்களை அடாத காய்ச்சல் வாட்டி வருத்திடினும் ஏடெடுத்தெழுதி விளக்குகிறார் அரிமாப் பாவலரேறு.

வன்மை நெஞ்சொடும், வலிமை உடலொடுமான ஐயனை விடாத காய்ச்சல் படாதுபடுத்தினும், கடுமைக் காய்ச்சலால் இலங்கிடும் இனத்தின் கொடுமை நிலைதான் தாளவில்லை என்று பொங்கிடும் கொள்கைப்போர் வீரர் தாம் பாவலரேறு.

–இப்பாடலும் ஐயா அவர்களின் வீட்டு மிசையின் எழுது அட்டையினின்று எடுத்துப் – பின்னர் வெளியிடப் பெற்றது.

-பொது ‘ஆ’ தனியார் சிறப்புப் பாடல்கள்-

63. 1958-ஆம் ஆண்டில் பெரியார் நடத்திய இந்திய நாட்டுப் படத்தைக் கொளுத்திய போராட்டம் பற்றிய பாடல் இது.

64. பெரியார் ஈ.வே.இரா. நாட்டுப் படத்தை எரித்துச் சிறை சென்று மீண்ட பொழுது எழுதியது.

65. இது, மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரை அவர்தாம் இருந்துவந்த திராவிடமொழி ஆராய்ச்சிக் குழுவினின்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் வெளியேற்றி, அவர்க்குப் பகரமாக எத்திறத்தானுத் தகுதிவாயாத ஒருவரை அமர்த்தியகாலை, அவர் நைந்த உளத்திற்குத் தேர்வு கூறுமுகத்தான் தி.பி.கசுகூஉ (1961)-ஆம் ஆண்டு ஆடவைத் திங்கள் 23-ஆம் நாள் எழுதியனுப்பிய பாவோலை.

66. அமைச்சராயிருந்த தமிழ்க்குடிமகனார் எனும் சாத்தையா அவர்களுடன் உழுவல் அன்பினராய் இருந்த நம்பாவலரேறு அவர்கள் தொடக்கக் காலத்தில் எழுதிய ‘பா’ மடல். சாத்தையா அவர்களின் பண்பும் - அவர்மீது ஐயா அவர்கள் கொண்டிருந்த அன்பும் விரிவாய்க் காட்டப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/27&oldid=1445496" இலிருந்து மீள்விக்கப்பட்டது