பக்கம்:கனிச்சாறு 7.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


ஓதுதற்கோ மிகஎளிமை! உணர்வதற்கோ
மிகவளமை! இனிமை! ஒன்றுந்
தீதில்லாத் தமிழ்த்தொண்டு! தீங்கில்லாச்
சுவைநலன்கள் திகழச் செய்தார்!
ஆதலினால் வாழ்த்துகின்றேன்! அன்பர்மணி
மாறன், எதிர் நீச்சல் வாழ்க!

1983


194

விடியல் விதைகள் - நூலுக்கு வாழ்த்து!


நச்சுவிதை தூவுகின்ற
நயனில்லா எழுத்தாளர்
நாற்புறமும் மிகப்பெருகிக் கீழ்மையால்,
கச்சவிழ்ப்பும் கற்பழிப்பும்
கதைகளெனப் பாக்களெனக்
கணக்கின்றிப் பரப்பிவரும் நாளிலே,
மெச்சுகின்ற கருத்துகளை
மேன்மையுறுந் தூய்தமிழில்
மிளிர்கின்ற பாக்களிலே தூவியே
அச்சுவடி வாய், ‘விடியல்
விதைகள்’
எனத் தாமளித்தார்
அன்பர் மணிமாறன்! என்றும் வாழ்கவே!

நல்லமனம் நல்லஎண்ணம்,
நல்லதமிழ், நல்லநடை,
நல்லவளம், நல்லகருத் தாகவே,
வெல்லவருந் தீந்தமிழ்க்கும்
வீழ்ந்தஇனம், நாட்டினுக்கும்
வீறுதரும் நல்விளைவை ஊட்டவே,
வல்லவராம் பாவடிப்பில்,
வாய்மை யராம் தொண்டுணர்வில்
வாழ் கடவூர் மணிமாறன் தூ வினார்,
நல்ல ‘விடி யல் விதைகள்’
நந்தமிழ்ப் பேரினத்தில்
நாற்றுவிட்டுப் பயிர்தழைத்து வாழ்கவே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/271&oldid=1447161" இலிருந்து மீள்விக்கப்பட்டது