பக்கம்:கனிச்சாறு 7.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  231


199

‘பூங்கொத்து’ நூலுக்கு வாழ்த்து!


வில்வ நாதனின் வியன்தமிழ்ப் பாக்கள்
சொல்வளம் கருத்து நலன்கள் தோய்ந்தவை!

யாப்பு முயற்சியில் எங்கோ ஒருசில
கோப்பு நெகிழ்ச்சிகள் இருப்பினும் குறைவிலாத்

தூய தமிழால் துலங்கிச் சிறந்தவை!
ஏய தமிழர் இனநலங் காப்பவை!

கொள்கை தெளிந்த கூர்மைச் சொற்கள்!
ஒள்கதிர் போல ஒளிரும் உணர்வு!

தொய்ந்த தமிழினம் தோள்களை உயர்த்தி
நைந்த வாழ்வை நன்னிலைப் படுத்திப்

பொலிவு மங்கிய தமிழைப் புதுக்கி
வலிவு பெற்றிட வாழ்வியல் கூறும்

நறுந்தமிழ்ப் பாக்களை நல்கிய பாவலன்!
வெறுந்தமிழ் உணர்வை விதைப்பவன் அல்லன்!

தமிழைத் தீய்க்கும் தகவிலாப் பாக்களை
உமிழும் கொடியவர் உயர்கின்ற நாளில்

உண்மைத் தமிழும் உயிர்ப்பும் கருத்துமாய்த்
திண்மைப் பாக்கள் செழிக்கத் தந்தனன்!

பூங்கொத் தென்னும் பொலிவுறும் இந்நூல்
தீங்கனிக் கொத்தெனத் திகழ்ந்து சுவைத்தது!

வில்வ நாதனின் விழுமிய முயற்சிகள்
வெல்க! அவன்பா விளங்குக நன்றே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/276&oldid=1447169" இலிருந்து மீள்விக்கப்பட்டது