பக்கம்:கனிச்சாறு 7.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


200

தமிழியக்கன் - நூலுக்கு அணிந்துரை!


தூவலி னால்பொருள் தொகுத்திடும்
விழைவினால் சிலர்தமிழ்த் தொண்டரென்பார்;
ஆவலி னால்சிலர் அருந்தமிழ்
அணியொடும் யாப்பொடும் ஆர்ப்பரிப்பார்;
நாவலர் ஆகியே நறுந்தமிழ்
நயத்தொடும் நடிப்பொடும் சிலர் நவில்வார்;
பாவலர் தமிழியக் கன்தமிழ்
பயில்வது பைந்தமிழ் பயனுறவே!

செறிவுற இலக்கியம் செய்குவார்
சிலரிவண் செந்தமிழ் செழிப்படைய!
நெறியியல் அறவியல் நிகழ்த்துவார்,
நீணிலம் கோணலை நிமிர்க்கவென்பார்!
வெறியியல் உணர்வுகொண் டாண்பெண்
உறவெலாம் சுவையோ டுரைத்திடுவார்!
‘அறிவியல் இலக்கியம்’ முழக்குவார்
தமிழியக் கன்தமிழ் அணிபெறவே!

(வேறு)


தனித்தமிழில் அறிவியலைப் பாட லாகத்
தகுகருத்துப் புலப்படவே ஆக்கித் ‘தந்தார்;
கனித்தமிழில் வல்லமைசேர் ‘தமிழி யக்கன்’
கருத்துக்கும் பாவுக்கும் தலைவ ரானார்!
‘இனித்தமிழில் எதனையுமே கூற லாகும்'
எனும் உண்மை மெய்ப்பித்தார் இந்த நூலால்!
நுனித்தறிந்த தமிழ்த்திறனால் ஆக்கம் சேர்க்கும்
நூலிதுபோல் பலவெழுதித் தருதல் நன்றே!

இன்றுவரை இயற்கையினைப் பாட வந்தார்,
எழில், உருவம், வண்ணங்கள், இலைகள், பூக்கள்,
குன்றுவளர் வெள்ளருவி, பறவை, மேகம்,
குளிர்கடல், தென் றல் - இவற்றைப் பாட லாக,
அன்றுயர்ந்த செந்தமிழில் ஆக்கித் தந்தார்;
ஆனால்நம் தமிழியக்கள் புலமை மிக்கார்,
நின்றவற்றின் அறிவியல்சேர் நிலைக ளெல்லாம்
நிலைத்ததமிழ் வல்லமையால் பாடல் செய்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/277&oldid=1447171" இலிருந்து மீள்விக்கப்பட்டது