பக்கம்:கனிச்சாறு 7.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


203

‘பிஞ்சுதமிழ்’, நூலுக்கு வாழ்த்து!


கொஞ்சித் தமிழ்பயிலும் அன்புக் குழந்தைமொழி
பிஞ்சு தமிழ் என்று பேசியே - விஞ்சுபுகழ்
பாவலர் கன்னல் பயந்தளித்தார் பாடல்நூல்
ஆவலுறுந் தூய்தமிழில் ஆம்!

அழகு நடை கூத்தாட அன்புமனம் பூக்கப்
பழகுதமிழ் எங்கும் பரவக் - குழகுமொழிப்
பால்வாய் தமிழ்மணக்கப் பாடினார் கன்னலெனும்
நூல்வாய் புலவர்இந் நூல்!

பாவலர் கன்னலெனும் பாப்புலவர் பன்னலமும்
மேவுபுகழ் பெற்று மிளிர்கவே - காவலுறுந்
தூயதமிழ் எங்கும் துலங்குகவே - தூற்றுவர்தம்
வாயடங்க மென்மேல் வளர்ந்து!

-1986



204

‘நீ தமிழ்மகனா’ - நூலுக்கு வாழ்த்து!


முப்பொழுதும் சிரித்தமுகம்,
முழங்குகின்ற செந்தமிழ்வாய்,
முனிவே இன்றி
எப்பொழுதும் இனநலத்தை
எந்தமிழ்நாட் டுரிமையினை
எடுத்தெ டுத்தே
செப்புகின்ற வீரவுரை,
செய்கின்ற நறுந்தொண்(டு), என்(று)
அனைத்தும் சேர்த்தால்
ஒப்புகின்றேன், எழில்வாணன்
உருவந்தான் முன்னிற்கும்
உணர்ந்து கொள்வீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/281&oldid=1447176" இலிருந்து மீள்விக்கப்பட்டது