பக்கம்:கனிச்சாறு 7.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  237


தப்பெழுதா மல்எழுதும்
தழைத்ததமிழ்ப் பெரும்பற்று,
தகைசால் பண்பு,
கொப்புளித்துப் பிறமொழிச்சொல்
துப்பிவிட்டுத் தூயதமிழ்
கூறும் வேட்கை,
அப்பழுக்கில் லாதஉளம்
அணையாத நல்லுணர்விங்(கு)
ஆருக் கென்றால்,
மெப்புதலுக் கில்லாமல்
உரைக்கின்றேன் எழில்வாணன்!
விழிமுன் நிற்பார்!

அன்னவர்தாம், ‘தமிழ்மகனா
நீ’
யென்றே கன்னத்தில்
அறைந்த தைப்போல்
மின்னலெனத் துடிக்கின்ற
மேலாம்ஓர் நூல்செய்தார்!
மிகம கிழ்ந்தேன்!
கன்னலென இனிக்குஞ்சொல்,
கருத்தூற்று; தூயதமிழ்
கமழும் பூங்கா!
மன்னுதமிழ் மலர்த்துகின்ற
மாபெருந்தொண் டென்றதனை
மதிக்கின் றேனே!

எம்புகின்ற பாட்டாற்றல்,
இறுமாந்த களிற்றுநடை,
இழுக்கா யாப்பு,
அம்பெழுந்து பாய்வதுபோல்
ஆர்க்கின்ற சொல்சீற்றம்,
அனைத்தும் சேர்ந்தே
செம்புலவர் எழில்வாணன்
செய்துள, ‘நீ தமிழ்மகனா’
எனும்நூல் சீர்த்தித்
தம்புலமைக் கோரெடுத்துக்
காட்டாகத் தான்நிற்கும்
தமிழ்போல் வாழ்ந்தே!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/282&oldid=1447177" இலிருந்து மீள்விக்கப்பட்டது