பக்கம்:கனிச்சாறு 7.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


209

‘கவிதை’யால் நீடு வாழ்க!


தமிழுக்குத் தெசிணி செய்யும்
தமிழ்த்தொண்டே ‘கவிதை’த் தொண்டு!
அமிழாத மரபில் பாக்கள்
ஆயிரக் கணக்கில் யாக்கும்
இமிழாத பாவ லர்கள்
எழுதிட வாய்ப் பளிக்கும்
கமழுறும் பெருமை மிக்கார்
‘கவிதை’யால் நீடு வாழ்க!

-1991



210

தமிழமல்லன் நூலுக்கு அணிந்துரை!


‘பாவேந்த ரும்தனித்த மிழும்’என்றே
தமிழமல்லன் பயந்து தந்த
மீவுயர்இவ் வுரைநூலுள் மேன்மையுறும்
பலகருத்தை மிளிரச் செய்தார்!
ஆவலுறக் காத்திடுக! அவர் ஆய்வை
ஒப்பிடுக! அமைவு கொள்க!
மேவுகஇந் நூல்எங்கும்! தமிழமல்லன்
மெய்யுழைப்பு மேலும் வெல்க!

பூவேந்தாய்ப் பிறந்தவர்கள் புகழெல்லாம்
பூவுலகில் புழங்கு மட்டும்!
நாவேந்தாய் வாழ்ந்திருந்த பாவேந்தர்
புகழென்றும் நலிவ தில்லை!
காவேந்தும் தென்றலெனும் தனித்தமிழே
நீயதற்குக் கரண மன்றோ?
பாவேந்தர் புகழ்சேர்க்கும் இந்நூலால்
பயன்மிகுக, பைந்த மிழ்க்கே!

-1991
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/287&oldid=1447183" இலிருந்து மீள்விக்கப்பட்டது