பக்கம்:கனிச்சாறு 7.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨௯

பாடல்களையும் எழுதி வெளிப்படுத்தி வந்தார். பாவலரேறு அவர்கள், மொழிப் பேரறிஞரின் மாணவர் ஆகையால், அவர்க்குச் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமையாகவும் பலர்க்கும் தம் ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலம் நன்கு விளங்குமாறும் அவர் பலமுறை கருத்துரைகளை வெளிப்படுத்தி வந்ததன் பயனாக, இறுதியில், கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்துப் பாவாணர், ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட’ நெறியாளராக அரசுப் பதவியில் அமர்த்தப் பெற்றார். அவ்வமர்த்தத்திற்கு மகிழ்ந்து கலைஞரையும் அவர் செயலையும் பாராட்டி எழுதிய பாடல் இது.

92. குடந்தைப் பண்ணாராய்ச்சிப் பேரறிஞர் ப.சுந்தரேசனார் அவர்களின் மணிவிழா வாழ்த்தாக 1974-இல் எழுதி விடுத்தது.

93. ஆசிரியரின் சிங்கை மலையகச் செலவின்பொழுது சிங்கைத் தமிழ்முரசு ஆசிரியர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் மறைவு குறித்து எழுதிய இரங்கற்பா.

94. காமராசர் மறைவின்பொழுது பாடியது.

95. 1975-இல் தமிழக விடுதலை மாநாடு நடத்திய ஆசிரியர் சிறைப்படுத்தப் பட்டார். ஐயா சிறையிலிருந்தபொழுது அவர் நடத்தி வந்த தென்மொழி இதழும் அரசால் தடைப்படுத்தப்பட்டதாகச் செய்தி வந்தது. அக்கால் கலைஞர் கருணாநிதி (அருட்செல்வர்) ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தமிழ்மொழிக்குப் பாடுபடுவதாகக் கூறப்பெறும் கலைஞரே தென்மொழியைத் தடை செய்தாரே என்று வருந்தி யெழுதியன இப்பாடல்கள்.

96. தென்மொழி சென்னைக்கு மாற்றலான பின், பாவாணர் ஐயா அவர்கட்குத் துணைசெய்வதில் அரசு செய்த இழுத்தடிப்புகளை மனத்தில் கொண்டு, பாவாணர்க்குத் துணைநிற்காமல், தமிழ்க்காவாத பிறர்க்குத் துணைசெய்வது கல்லுக்குத் துணை செய்வதையொத்தது என்று கடுஞ்சினத்தொடு சாடுகிறார் பாவலரேறு.

97. பாவலரேறு ஐயா அவர்களின் குடும்ப நண்பரும், ‘தமிழம்’ இதழ் ஆசிரியருமான செ.பன்னீர்ச்செல்வம் – உலகமுதல்வி ஆகியோரின் மூத்தமகன் அறிவழகன் நீச்சல்குளத்தில் நேர்ச்சியில் மறைவுற்ற பேரவலச் செய்திக்கு மனம் வருந்திய ஐயா அவர்களின் பாடல். இந் நேர்ச்சி நிகழுகையில் ஐயா அவர்கள் ‘மிசா’க் கொடுஞ்சிறையில் இருந்தார்கள். மறைவுற்ற அறிவழகனின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு ஒருநாள் சிறைக்காவல் விடுப்பில் ஐயா அவர்கள் வந்து கலந்து கொண்டார்கள். அக்கால் இப்பாடலை ஐயா அவர்களின் இரண்டாம் மகள் தேன்மொழி பாடுகையில் அனைவரும் அழுது அரற்றிய நிலையிலேயே கேட்க முடிந்தது.

98. திருமலை முத்துச்சாமி வாழ்க! நூலக அறிஞர் திருமலை முத்துச்சாமியின் ஐம்பதாவது பிறந்த ஆண்டு மலர்க்கு அவரை வாழ்த்தி விடுத்தது.

99. புதுவைத் தனித்தமிழ்க்கழக அமைப்பாளரும் செயலாளரும் ஆகிய தமிழமல்லன் எழுதிய, ‘பாவேந்தர் ஊட்டிய தமிழுணர்வு’ என்னும் நூலுக்குத் தந்த முன்னுரை.

100. உண்மைத் தமிழ்க்கே உயிராய் வாழும் மொழியியல் ஞாயிறு பாவாணரை அவரின் பணிச்சிறப்புவழி இளைஞர்க்கு உணர்த்திக் காட்டுகிறார் பாவலரேறு.

101. நல்லாசிரியர் விருது பெற்ற புலவர் பழனி மாணிக்கத்தின் பாராட்டு விழாவிற்கு விடுத்த வாழ்த்துப்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/30&oldid=1445499" இலிருந்து மீள்விக்கப்பட்டது