பக்கம்:கனிச்சாறு 7.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩0

கனிச்சாறு ஏழாம் தொகுதி


102. நெடுநாள் தென்மொழி அன்பரும், மணப்பாறை திருக்குறள் பயிற்றக நிறுவனருமான புலவர் திருக்குறள் நாவை - சிவம் அவர்கள் 1978-ஆம் ஆண்டு புலவர் பட்டம் பெற்றபோது அவரை வாழ்த்தி எழுதிய பாவலரேறு அவர்களின் பாடல்.

103. பெரியாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி பெரியார் நம்மிடைப்பிறந்திராவிட்டால் நரியார் நாயகமே இங்கு நடந்திடும் என்று பெரியாரின் அருஞ்சிறப்பை விளக்குகிறார் பாவலரேறு அவர்கள்.

104. தமிழ்ச்சிட்டு அட்டைப்பாடலில் குழந்தைப் படங்களுடன் வெளியிடப் பெற்ற பாடல் வரிசையில் புத்தரொடு இருக்கும் குழந்தைப் படத்திற்கான பாடல் இது. புத்தனின் வாழ்வியல் சிறப்பை எளிய நடையில் சொல்கிறார் பாவலரேறு. குழந்தையாய் இருப்பவர் சித்திரச் செந்தாழை. (ஐயா அவர்களின் மூன்றாம் மகள் குழந்தையாய் இருந்தபோது எடுத்த படம்)

105. தெசிணி அவர்களின் ‘கவிதை’இதழ் பதினெட்டு ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடத்தப்பெற்றுவருவதற்காகப் பாவலரேறு அவர்கள் எழுதி அனுப்பிய வாழ்த்துப் பாடல், அன்னாரின் சிறப்பையும் குறித்ததாய் அமைந்தது.

106. நாய்ப்புலவர் வாழ்கின்ற நாளினிலே, நாப்புலர் சோமசுந்தர பாரதியார் சிறப்புக்குப் பாப்புகழ் பாடுகிறார் பாவலரேறு. சோமசுந்தர பாரதியாரின் நூற்றாண்டு நிறைவுக்குத் ‘தென்மொழி’ - சிறப்பிதழாகவும், ஐயா அவர்களின் இப்பாடலுடனும் வெளிவந்தது.

107. பெரியார் உவக்கும் பெருந்தொண்டர் நெடுஞ்செழியனார் பல்லாண்டு வாழ்க! பெரியார் தொண்டராய் இருந்த நெடுஞ்செழியன் அவர்களின் அறுபானாண்டு விழா மலர்க்கு வாழ்த்துப் ‘பா’வாய்ப் பாவலரேறுவின் பாடல்,

108. தம் பள்ளிப்பருவத்தினின்று பாவாணரோடு நல் ஆசிரியர்க்கான மாணவராய்ப் பயின்று, பேணிப், புரந்து வாழ்ந்த பாவலரேறு ஐயா அவர்கள், பாவாணர் அவர்களின் பிரிவால் உளந்தாளாமல் அழுந்திப் பாடிய பாடல்.

109. உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் மறைவுக்கு வருந்தி அவர் புகழ் பாடிய பாவலரேறுவின் பாடல்,

110. பண்ணாராய்ச்சிப் பாவாணர் குடந்தை சுந்தரேசனார் மறைவினால் இனி யார் தமிழ்ப்பண்ணுக்குக் காப்பு? என்று வருந்திப் பாடுகிறார் பாவலரேறு.

111. திராவிடர் கழகம் அறிவித்திருந்த மநுநூல் எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாவலரேறு அங்கு எழுதிய பாடல்.

ஐயை - முதல்பகுதியை வேலூர்ச் சிறையில் எழுதுகையில் அந்நூலுக்குப் படையலாய்த் ‘தண்ணியல் மனைவி தாமரைக் கிதுவே’- என்று மொழிந்த பாவலரேறு ஐயா அவர்கள் தம் மனைவி தாமரை அவர்களின் அன்பின், பண்பின் சிறப்பு குறித்து விரித்துப்பாடிய பாடல் இது.

112. மணியும் நேரமும் காலமும் பாராது மக்கட் குழைத்த மணவழகனார் திரு.வி.க. அவர்களின் நூற்றாண்டில் அவரின் தெய்வ வாழ்வை தெளிவுறுத்துகிறது பாவலரேறு அவர்களின் இப்பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/31&oldid=1445500" இலிருந்து மீள்விக்கப்பட்டது