பக்கம்:கனிச்சாறு 7.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௪

கனிச்சாறு ஏழாம் தொகுதி


இதன் கற்பனை வருமாறு:

மணம் பெற்ற மணவாளனும், மணவாட்டியும் தலைநாள் இரவில் முதலாம் பிறையில் நிலா முற்றத்து அமர்ந்திருக்கின்றனர். அக்கால், அவர் மணந்த சிறப்பும், அவர் நடத்தப் போகும் இல்லறத்தின் நலனும் அதனால் அவர் பெறப்போகும் பெருமையும் புகழும் இவற்றால் அவர் இடையறாது பெறவிருக்கும் இன்பமும் விளங்குமாறு பாடி யாழை மீட்டி இசைக்கின்றனர் தலைவியின் தோழியர்.

இருளின் அமைதியிலும், மணமக்களின் இன்பப் பூரிப்பிலும்பட்டுத் தெறித்த அவ்விசைப் பாடல்கள் வளர்பிறை முதல்நாள் தொடங்கி முழுநிலவு நாள்வரை நாளொன்றுக்குப் பாடல் ஒன்றாகத் தொடர்ந்து பாடப் பெற்று முழுநிலவில் முற்றுப் பெறுமாறு அமைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு திங்கள் வளர்பிறையிலும் பாடிக் களிக்குமாறு இயங்குவன.

பதினைந்து பாடல்களிலும் வளர்பிறையின் பதினைந்து நிலைகளுக்கும் பதினைந்து உவமைகள் கொடுக்கப் பெற்றிருப்பது இன்பம் பயக்கும்.

150. புலவர் சீனி. சட்டையப்பன் – மணிமேகலை: தொடக்கக்காலத்தில், ஆசிரியரின் தென்மொழி வெளிவரத் துணையிருந்த அன்பர்களுள் ஒருவர் புலவர் சீனி.சட்டையப்பன். பாவாணர் தலைமையில் ஆசிரியர் சிறப்புரையுடன் நடந்த அவர் திருமணத்தில் வாழ்த்திய வாழ்த்துப்பாடல் இது.

151. இளஞ்செழியன் – முல்லைவடிவு : திருமணவாழ்த்துப்பா

152. சி. இராமச்சந்திரன் – பார்வதி: திருமண அழைப்பிதழாக எழுதிக் கொடுத்தப்பாடல்

153. நாவை சிவம் – தாமரை, முதல்மகன் சிவ. தமிழ்க்கதிரவன் பிறப்புக்கு வாழ்த்து!

154. நாவை. சிவம் – தாமரை, மகள் தமிழ்மலர் பிறப்புக்கு வாழ்த்து!

155. அ. தெ. தமிழநம்பி – மலர்க்கொடி; ஆசிரியர் தலைமையேற்று நடத்திய, நெடுநாளையத் தென்மொழியன்பரும், தொண்டருமாகிய தமிழநம்பியின் திருமணத்தில் வாழ்த்திப் பாடியது. இது. தென்மொழிக் குடும்பத்தினர் அனைவரும் திருமணத்தில் பங்கேற்றனர்.

156. அரசிறைவன் – கதிர்மதி: நெருங்கிய தென்மொழி அன்பர் அரசிறைவன் திருமணத்தில் ஆசிரியர் வாழ்த்து இது. திருமணம் ஆசிரியர் தலைமையில் நடந்தது.

157. முத்தையன் – அரசிறைவி: தென்மொழியன்பர் புலவர் கதிர்.தமிழ்வாணன் அவர்களின் இளவல் திருமணம் இது. ஆசிரியர் நெருக்கடி நிலைக்காலத்தில் சிறையிலிருந்தபொழுது நடந்த இத்திருமணத்திற்குச் சிறையிலிருந்தே விடுத்த வாழ்த்துப்பாடல் இது.

158. இளவழகன் – வளர்மதி: உரத்தநாடு தென்மொழியன்பர் திரு.கோ.இளவழகன் அவர்கள் திருமணம் ஆசிரியர்நெருக்கடி நிலையில் சிறையிலிருந்த பொழுது நடந்தது. அதற்குச் சிறையிலிருந்து விடுத்த வாழ்த்து இது. (இக்கால் தமிழ்மண் பதிப்பகம் வைத்துத் தொண்டாற்றி வருபவர்)

159. புலவர் சிவ சண்முகம் – செல்வி கலாவதி; தமிழர் நலங்கருதும் புலவர் சிவ சண்முகம் அவர்களின் திருமணம் பாவலரேறு ஐயா அவர்கள் தலைமையில் நடந்தது. திருமணத்தில் ஐயா அவர்களின் நூறாசிரியம் (முதல் பத்துப்பாடல்கள்) நூலைப் புலவர் வெளியிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/35&oldid=1445506" இலிருந்து மீள்விக்கப்பட்டது