பக்கம்:கனிச்சாறு 7.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  3


1  என்னே செய்வேன் ?


சீறுகின்ற நாகத்திடை மணியும், சேற்றில்
சிரிக்கின்ற தாமரையும், காட்டி னூடே
நாறுகின்ற அகில் மரமும், மண்ணுக் குள்ளே
நற்பொன்னும், சிப்பியிடை முத்தும், ஆற்றில்
ஊறுகின்ற நல்லூற்றும், தீயைக் கக்கும்
உயர்மலையில் இயற்பொருளும் இருக்க, என்போல்
தேறுகின்ற பாவலர்க்கிங்(கு) இலக்கி யத்தில்
"திறமில்லை" என்கின்றார், என்னே செய்வேன்?

மணக்கின்ற தமிழாலே இன்பம் சேர்த்து
மக்களிடை யெழுத்தாலே ஓர்பு ரட்சி
கணக்கின்ற வகைசெய்ய எண்ணங் கொண்டு,
'கவி' வாழும் மலர்க்காட்டின் வாழ்வி டத்தில்
"எனக்கொன்று" வேண்டுமென்றேன்; இலக்கி யத்தை
எடுத்தியம்பும் பெருமக்கள் என்னெ ழுத்து
"மணக்கின்ற விதமில்லை" என்று கூறி
மறுத்துவிட்டார் 'புலவனென' என்னே செய்வேன்?

"மலைகொடுக்கும் அழகையெல்லாம் சேர்த்தும், வானின்
மகிழ்கின்ற செம்பரிதி அழகும், நீல
அலைசூழும் கடல்பாடும் பாட்டும், காலை
அழகோடும் மங்கையர்கள் எழிலும், வாழ்வில்
நிலைகுன்றி வாழ்கின்ற மக்கள் நெஞ்சில்
நினைப்பூட்டும் பாடலெலாம் வரைவேன்” என்று
கலைவல்லார் பாற்சொன்னேன்; என்றன் பாட்டில்
“கருத்தில்லை” என்கின்றார் என்னே செய்வேன்?

-1949

(பாவேந்தர் பாரதிதாசனைப் பார்த்துவிட்டுப் புதுச்சேரிக் கடற்கரையில் அமர்ந்து எழுதியது. ஒரிரு வடசொற்கள் களையப்பெற்றுள்ளன)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/48&oldid=1441913" இலிருந்து மீள்விக்கப்பட்டது