பக்கம்:கனிச்சாறு 7.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  5


3  நண்பரின் இனிய நட்பே யாவையினும் இன்பம்!

துள்ளிவரும் இளங்குழந்தை குளிர்க்கையால் என்னைத்
தொட்டளிக்கும் இன்பத்தை என்றென்றும் ஒளியால்
அள்ளிவரும் வெண்ணிலவே! ஒருசெய்தி சொல்வேன்.
அழகென்னைக் கவர்ந்தென்றன் எண்ணத்தைக் கொஞ்சம்
கிள்ளிவிடும்; அக்காலை என்னெஞ்சிற் பாடல்
கிளர்ந்துவரும்; அந்நிலையே இன்பமெனச் சில்லோர்
தெள்ளியதா யுரைத்திடுவர்! என்மட்டில் இன்பம்
தெரிகின்ற பொருளில்லை என்றிருந்து வந்தேன்!

பாடிவரும் வெள்ளருவி இன்பமென்று சொல்வோர்
பாங்கினிலே சென்றுமெனக் கின்பம் கிட்டவில்லை;
கூடிவரும் சிட்டிரண்டு கொஞ்சுகின்ற மொழியில்,
கொள்ளைஇன்பம் என்றுரைத்தார் அங்குமதைக் காணேன்!
ஊடிவரும் கிள்ளையது தென்னைப் பொன்னூசல்
உட்கார்ந்தே ஆடுகையில் ஆண்கிள்ளை அங்கே
தேடிவரும்; கண்டபின்னை கொவ்வை மூக் கொட்டும்
திளைக்காத காட்சியின்பம் என்றுரைப்பார்; காணேன்!

"நீலவுடை குளிர்ஆழிப் பெண்ணுடுத்தி நிற்பாள்;
நினைவழியாப் பொன்பரிதிக் காதலனைக் கண்டு
கோலமிகு பொன்னுடையை யுடுத்தி மகிழ் விப்பாள்!
கொள்ளைகொள்வாள் உள்ளத்தை;
நெஞ்சிலின்பம் தோயும்
ஓலமிடும் கடலைப்பார்;" என்றுரைத்தார்க் கொப்ப
ஓடியதைக் கண்டுமெனக் கின்பமென்ப தில்லை.
ஞாலமெலா மின்பத்தின் சாயலதே என்றார்;
நான்தேடி யலைந்துவிட்டேன் இன்பமெனக் கில்லை.

“நம்முடலில் தீங்கென்றால் அவளுயிரில் தீயாம்”
நற்பெண்டிர் கொஞ்சுமொழி கோடி யின்ப மென்றார்.
இம் மொழியின் வழிநின்றும் இன்பமொரு துளியும்
எனக்கில்லை! 'தமிழ்ச்சுவடி செய்கின்ற புலவர்
செம்மொழியில் சுவையில்லை எனிற்பேதை' யென்று
செப்பியவர் முறைநின்று பழஞ்சுவடி கண்டேன்.
அம்மொழியும் இன்பத்தை எனக்கூட்ட வில்லை!
அலைந்துகண்ட இடமெல்லாம் இன்பமிலாக் காடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/50&oldid=1441915" இலிருந்து மீள்விக்கப்பட்டது