பக்கம்:கனிச்சாறு 7.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  7


4  இருளின் அணைப்பு!

நல்லவிருள்! தூங்கு கின்றார்,
நானிலத்து மக்கள்;
மெல்ல மெல்ல இரவுப்பெண்
மேலிமைகள் மூடி,
வெல்ல என்னை வருடுகின்றாள்,
விரியிருட்கை நீட்டி!
வல்லுறக்கம் கலைந்த(து) இரு
விழிவருந்த எழுந்தேன்!

பகலுழைப் பால் பயன டைந்தார்,
படுத்த யர்ந்து விட்டார்!
அகல் விளக்கில் எண்ணெயில்லை!
அயரு கின்ற நேரம்!
துகள் கொணரும் காற்றில்லை!
தென்றல் என்னை நீவ
அகமெழுந்த துயர மென்னை
அலைக் கலைப்ப தேனோ?

இருட்டியதால் உறங்குகின்றாள்
இல்லாள் என்றன் அருகில்!
உருட்டுவிழி மூடியவா
றுறங்கிய தெம் குழந்தை!
திரட்டு பெருஞ் செல்வத்தினார்
தூங்குகின்றார் நன்கு!
மருட்டு மெனை வறுமை வந்து!
மாய்க்க வில்லை ஏனோ?

விடிந்துவிட்டால் வெம்பசிக்கு
வேக வைக்க, அரிசி
முடிந்து விட்ட தாலெனக்கு
மூளைசரி யில்லை!
கடிந்து கொண்டார் குடியிருப்புக்
கூலிக் கென்ன செய்வேன்?
மடிந்து விட்டால் ‘கோழை' யென்பார்
மாந்தரெனை; அறிவேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/52&oldid=1426840" இலிருந்து மீள்விக்கப்பட்டது