பக்கம்:கனிச்சாறு 7.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


வேலைக்கென வெளியிற் சென்று
வீடு நோக்கி வந்தேன்!
"மாலை வரக் கூறினை நீ
மாதமென்ன" என்றான்;
'காலை’ யென்று பல்லைக் காட்டக்
கடிந்து கொண்டான், செட்டி!
ஆலை சூழும் பஞ்சுபோல
அலைந்த தெவர் கண்டார்?

"சாலுக்குள்ளே அரிசி தேடித்
தேளைத் தொட்டு விட்டேன்;
“ஆளுக் கொன்றும் ஏதமில்லை"
என்று சொன்னான் ஐயன்!
பாலுக்கென நடை நடந்தாள்
பத்து தரம்" என்றாள்!
"நாலுக்குள்ளே ஒன்று சொல்வீர்"
என்று கேட்டாள் இல்லாள்!

'இரண் டென்றேன்; 'கட்டாயம்
இது நடக்கும்' என்றாள்;
'புரண்டுவரும் வெள்ளத்தின்
புதுச்சுவடி யிரண்டும்
திரண்டொருங்கே அச்சாகும்'
என்பதுதான் கருத்தாம்!
மருண்டபடி நின்றி ருந்தேன்!
செய்தி யொன்று கண்டேன்!

பகலிரவாய் அமர்ந் தெழுதிப்
பாவரிசை கொண்டு
திகழ்நூலை அச்சகத்தார்
திருப்பி யிருந் தாரே!
மகள் விழித்துக் கொண்டாள்!
மனைவி விரைந் தெழுந்தாள்!
அகல் விளக்கில் எண்ணெயில்லை!
அணைத்த தெம்மை இருளே!

-1951
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/53&oldid=1441917" இலிருந்து மீள்விக்கப்பட்டது