பக்கம்:கனிச்சாறு 7.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  9


5  நெஞ்சே!

அருளுளார், துன்பங் கண்டால்
அணுகுவார், இன் சொற் காத்த
பொருளினால் தாமும் உண்டு,
புரக்குநர், சமயம் சாதி
மருளினால் மடமை தோயார்,
மாண்புளார், இருப்பா ராகில்
இருளினால் மாய்வோ னெம்மை
எடுத்தேகாய் அவர்பால் நெஞ்சே!

முதியராய் அறிவால், அன்பு
முறையினால் மகவாய், மற்றோர்
புதியராய் வருவோ ரென்னில்
புதுமகிழ் வுற்றா ராகிப்
பொதியதாய் வளமும் வாழ்வும்
பூத்துநல் லின்பம் பூத்த,
பதியுள தாகின், எம்மைப்
பரிந்தெடுத் தேகாய் நெஞ்சே!

கற்றவர், ஒழுங்கைப் பெற்றார்,
கவலறப் பணியைச் செய்வார்,
உற்றவர் நாட்டை ஆள
உரிமையும், அன்புந் தேங்கி
மற்றவர் வாழத் துன்பம்
மாய்த்தலும், ஏய்ப்புந் தீங்கும்
அற்றவர் வாழின் எம்மை
அவணெடுத் தேகாய் நெஞ்சே!

அல்வழிப் பொருளை ஆக்கல்,
ஆக்கானை இழித்துப் பேசல்,
பல்வழி மடமை காட்டல்,
பிறப்பினால் உயர்தல், தாழ்தல்,
தொல்வழி முறையென் றீவை
தோயாமல்,உயர்வொ ழுக்கம்
செல்வழிச் செல்லு வோர்பால்
சேர்த்தெனை உய்ப்பாய் நெஞ்சே!

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/54&oldid=1441919" இலிருந்து மீள்விக்கப்பட்டது