பக்கம்:கனிச்சாறு 7.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


6  மூச்சும் பேச்சும்!

இன்பத் தமிழ்மொழிக் கென்றும்
என் மூச்சும்,
இனிய தமிழ்நாட்டைப் பற்றி
என் பேச்சும்,
அன்பின் பிணைப்பினுக் கென்றன்
கை வீச்சும்,
அடங்காமல் என்றும்இத் தரையில்
நின் றோச்சும்!

-1952




7  என் பள்ளிக்கூடம்!

சுற்றி யிருக்குமிந் நான்கு சுவர்கட்குள்
இன்பத் தமிழ் படித்தேன், அன்பைச்
சொல்லில் விளைத்த முதியவர்பால் இன்பச்
செந்தமிழ்த் தேன் குடித்தேன்!
வற்றி யிருக்குங் களர்நிலம் போல், வெறும்
வான வெளியினைப் போல்,நின்ற
வன்னெஞ்சை நன்னெஞ்சா யாக்கி அறிவெனும்
வளந்தனை இங்குப் பெற்றேன்!
பற்றி யிருக்குங் கல்லாமை யெனுமொரு
பாழிருள் நீங்கப் பெற்றேன்! மனப்
பான்மையும் மேன்மையும் நல்லுளத் திண்மையும்
பாங்குற இங்குக் கற்றேன்!
முற்றி யிருக்குங் கதிரினைப் போல், மழை
மூண்ட முகிலினைப் போல், உளம்
மொய்க்கும் பயன்நிறை வாகிப் பொழிந்திட
முந்துறப் பாடுகின்றேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/55&oldid=1441920" இலிருந்து மீள்விக்கப்பட்டது