பக்கம்:கனிச்சாறு 7.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

நெஞ்சுகளில் நிற்கின்றேன்; அஃதே யாற்றில்
நண்பரெல்லாம் என்னுடலில் ஓடுகின்ற
உஞ்சியெழும் குருதியிலே உயிராய் அன்பாய்
ஓடுகின்றார்; அவரனுப்ப, சென்னை சென்றேன்.

கண்ணோடென் கண்பிரிய, இனிய சொற்கள்
கழறும்வா யோடென்வாய் பிரிய, நெஞ்சு
புண்ணாகிப் போகந்தப் புண்ணில் வேலைப்
போட்டிட்டாற் போல் துடிக்க, நிலவுதன்னை
விண்பிரிதல் போல், நத்தை ஓடுவிட்டே
விலகுதல்போல், குருடனைக்கோல் பிரிதல் போலப்
பண்பாலும், அன்பாலும் ஒன்றாய் வாழ்ந்த
பறவையைப் போன் றன்பர்விட்டுச் சென்னை சென்றேன்.

படைதிரண்டு வரல்போல நண்பர் கூட்டம்
பதைபதைக்கும் பேச்சோடும் உள்ளத்தோடும்
விடைகொடுக்க, நானழுக, வந்தா ரெல்லாம்
விசித்தழுக, உடல்வருந்த உள்ளம் வேக
இடையில்வந்த புகைவண்டி என்னை ஏற்றி
இழுத்துச்செலப் பிரிந்த தந்தோ, குதித்து நீந்தும்
மடைவிட்ட தரைமீனாய்த் துடிதுடிக்க
மாண்புடையார் வழியனுப்பச் சென்னை சென்றேன்.

உருகுகின்ற உள்ளங்களைப் பிரிந்து வண்டி
ஓடிற்று! மடமையினால் சாகும் நாட்டைத்
தருகின்ற நல்லறிவால் திருந்து வோர்க்குத்
தளர்வூட்ட அறிவில்லா மக்கள் தம்மால்
வருகின்ற எதிர்ப்பு தன்னைப் பிளந்துசெல்லும்
வகைபோல இருள்கிழித்து வண்டி செல்லும்!
பருகுகின்ற காட்சிபல கண்டேன் நண்பர்
பிரிவினையும் ஒருவாறு மறந்து சென்றேன்.

பொருள்வைக்கும் பலகையிலே படுக்கை நீட்டிப்
புரண்டார்கள் ஓரிருவர் அவற்றிற் கெல்லாம்
அருள்கொடுத்து வைக்காத ஆட்கள் சில்லோர்,
அடித்தளத்தில் உருண்டார்கள்! அவர்கள் தம்மேல்
சுருள்சுருளாய் வட்டமிட்டு புகைகள் செல்லச்
சுருட்டுகளைப் பிடித்தார்கள் கிழவர் சில்லோர்!
இருள்வெளியின் தலைநீட்டிச் சிலபேர் என்போல்
எழுந்துவரும் வெண்ணிலவைக் கண்டு சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/57&oldid=1441922" இலிருந்து மீள்விக்கப்பட்டது