பக்கம்:கனிச்சாறு 7.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

குறுக்கம் ஏன்? ஏழைகளின் எலும்பை வைத்தே
குருதியினைச் சேறாகப் பூசி, வானிற்
பறக்கின்ற கழுகுக்குப் பாது காப்பாய்ப்
பண்ணிவைத்த மாளிகைகள் கண்டேன் கண்டேன்!

கண்டுகண்டு கொதித் தெழுந்த குருதிதன்னைக்
கடற்காற்று குளிர்மைசெய் வகையால் நெஞ்சில்
பண்டுதமிழ் நூல்களையான் படிக்குங் காலைப்
படிப்படியாய் உயர்கின்ற இன்பத் தூற்றை
மொண்டுமொண்டு அருந்துதல் போல் இன்பஞ்செய்தும்
முன்கண்ட காட்சியெலாம் ஒன்று சேர்ந்து
‘தொண்டுசெய், தொண்டுசெய்’ என்று...
துணைசெய்யத் தமிழ்த்தாயை வேண்டி நின்றேன்!

‘கடற்கரைக்கு வரச்சொல்வாய்’ என்று சொன்னாள்
‘கவிதை’ப் பெண், “காற் றென்னுந் தோழியண்டை!
‘இடருற்ற நெஞ்சுக்கோ ருவகை’ என்றே
என்னைவந் தழைத்திட்ட தோழி யோடு,
கடற்கரைக்குச் சென்றே னோர்மாலை! நீலக்
கடல்தன்னை மறைத்துவிடும் மக்கள் கூட்டம்!
சுடரொளியாய்ச் செம்பரிதி பவளத் தூறல்
சொறிந்திற்று! மக்கள்சூழாம் கோவைக் காடு!

மேனாட்டி னுடையால்தம் மேனி மூடி
மேற்காகக் கிழக்காகப் போனார் சில்லோர்
கூனாட்டம் போடுகின்ற பெண்க ளோடே
குறுக்காக நடந்துமணல் மேல் கிடப்பர்!
தேனீட்டும் ஈக்கள்போல் சிறுவர் கூட்டம்
தின்பண்டக் கடைசூழும் பல்லாறாகத்
தானீட்டும் பொருள்பற்றி ஒருவன் பேசத்
தலையாட்டிச் செல்வார்நா லைந்து பேர்கள்!

‘கடலைப்பார் அலைவருது’ என்பா னோர்சேய்!
‘கடலைவாங் கித்தாநீ’ என்பா ளோர்பெண்!
‘உடலைப்பார்; அழகைப்பார்; இடைதன்னைப்பார்
ஒடிந்து விடும்போல் காணும்’ என்பான்காளை!
இடம்விடுங்கள் என்பானோர் வண்டிக்காரன்;
இழுத்தபடி ஓடிடுவான்; வண்டிக்குள்ளே,
“விடுடா, நீ, விடு விரைவில்” என்று கூறும்
வெறிபிடித்த கல்நெஞ்சன்! ஏழ்மைக்கூற்று!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/61&oldid=1446012" இலிருந்து மீள்விக்கப்பட்டது