பக்கம்:கனிச்சாறு 7.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  19


9

தாய்மை வணக்கம்!


வாய்மை நெஞ்சிலும், வான்பொறை சொல்லிலும்
தூய்மை நிகழ்விலும், துடிப்புநற் பணியிலும்
சேய்மை புரப்பிலும் சிறப்புறக் கொள்ளுமோர்
தாய்மை மகட்குயான் தலைதாழ்த் துவனே!

1960

 


10

கவிஞர் மேல் காதல்!




கவிஞர் மேல் காதல் கொண்டேன் - புதுவைக்
கவிஞர் மேல் காதல் கொண்டேன் - புரட்சிக் (கவிஞர்)

செவிபருக எழிலைச் செந்தமிழில் காட்டிச்
சிந்தனை விழிப்பினைச் சொல்லெல்லாம் மூட்டி
அவிகின்ற நெஞ்சத்தை அழியாது காக்கும்
அழகுக் கவிதைபாடி உள்ளந்தனையே ஊக்கும் (கவிஞர்)

சந்தனக் குளிர்இசை ஓடையில் குளிக்க,
சந்தத்தில் நெஞ்சத்து மயில் என்றும் களிக்க,
நொந்தவர் நோமறந் தேயின்பம் ஏந்தும்
நந்தமிழ் இசைபாடி உள்ளந்தனையே காந்தும் (கவிஞர்)

அழகிய தீந்தமிழ்ச் சொல் ஒவ்வொன்றும் கோத்து
அணிபெற மாலையெனுந் தமிழ்ப்பாடல் யாத்துப்
பழகிய மாப்புலவன், பாடலின் வென்றி,
பைந்தமிழ் மணஞ் சேர்க்கும் இசையினில் ஒன்றி (கவிஞர்)

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/64&oldid=1446015" இலிருந்து மீள்விக்கப்பட்டது