பக்கம்:கனிச்சாறு 7.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


11

நெஞ்சின் அழுகை!


எழுதி எழுதிச் செல்கின் றேன், நான்!
என்ன பயன், என எண்ணிப் பார்க்கிலேன்!
உழுது விதைத்தவை ஒருநாள் விளையுமோ?
ஊமை விதைகளாய்ச் சாவியாய் ஒழியுமோ?
புழுதியுள் மறையுமோ? பூக்களாய் மலருமோ?
அழுகியும் உலுத்தும் அமுங்கிப்போகுமோ?
பழுதென் றுரைத்து, அவை பழித்திடப் படுமோ?
பயன்ப டாதென விலக்கிடப் படுமோ?
தொழுது போற்றுமோர் காலந் தோன்றுமோ?
துயரச் சுமைக்கொரு தூண்என நிற்குமோ?

பசித்த அறிவினால் புசித்திடு வார்களோ?
பரபரப் புணர்வொடு கொறித்திடு வார்களோ?
விசித்து விசித்து, நான் அழுத அழுகையும்
விடிய விடிய, நான் வடித்த கண்ணீரும்,
மக்கள் இனத்தின் கடைசி மாந்தனின்
ஒக்க அழுகையோ டொன்றாய் இணையுமோ?
ஒழுகுகண் ணீரோ(டு) ஓடிக் கலக்குமோ?
எழுதி எழுதிச் செல்கின் றேன், நான்!
என்ன பயன், என எண்ணிப் பார்க்கிலேன்!

- 1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/65&oldid=1446017" இலிருந்து மீள்விக்கப்பட்டது