பக்கம்:கனிச்சாறு 7.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


சின்னாட்கு முன்கற்றோர் உரை நடையிற்
சொன்ன தென்ன வென்றுணரோம் கற்கும்போது
தின்னாத தீஞ்சுளையின் இனிமை போலத்
தெரிந்தாலும், சுவைத்தாலும் நாட்கள் மாள
இன்னாமற் போமன்றோ! கவியோ யாண்டும்
இன்பத்தைத் தருகின்ற தீஞ் சாறன்றோ?
பின்னாளிற் படிக்குங்கால் முன்னாள்கொண்ட
பேரின்பந் தரவல்லார் கவிஞர் அன்றோ?

உண்ணுங்கால் இன்பத்தைத் தருதற் குற்ற
உரைநடையே பெண்கள்தம் உடல்கள்! அன்பை
எண்ணுங்கால் மகிழ்கின்றோம்; கவிதை யந்த
யின்பத்தைப் போன்றதெனின் வேறே என்ன?
மண்ணுக்குள் உடல் மாய்ந்தால், மக்கள் நெஞ்சில்
மாளாது வாழ்வதென்ன உள்ளம் அன்றோ?
பெண்ணென்றால் இலக்கியத்தைக் கவியே உள்ளம்
பேரின்பந் தரவல்லார் கவிஞர் அன்றோ?

அரைகுறையாய்க் கற்றவரு முரையில் நூலை
ஆக்குதல்சா லும்அந்நூல் நன்னூ லாகி
உரைதருமோ? அறிவாமோ? ஆகா தென்னின்
உணராதான் ஏனெழுத வேண்டும் என்றால்
உரைநடைக்கே யறிவிலிக்குத் துணிவி ருக்கும்
ஒருகவிதை யெழுத மனந் துணியானன்றோ?
கரையுடைத்தே யெழுந்துவரு முணர்வா லின்பங்
காண்டவர்க்கும் ஈந்துவப்பான் கவிஞன் அன்றோ?

கற்றதையே உரைநடையில் கூறல் வேண்டும்;
கற்றிடப்பல் வேறு வகையாகக் கூற
உற்றவரோ எழுத்தாளர்? கவிஞன் என்னின்
ஒருசின்ன பொருள்தனிலும் புதுக் கருத்தைப்
பெற்றதனை மற்றவர்க்கு மீவான்; ஈண்டுப்
பெறுவதென்ன? இயற்கை கலைக் கூடமாகும்
சுற்றுமுள தோடதனைச் சூழ்வர் முன்னோர்;
சொலவல்ல கணக்காயர் கவிஞர் அன்றோ?

-1960 (?)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/67&oldid=1446019" இலிருந்து மீள்விக்கப்பட்டது