பக்கம்:கனிச்சாறு 7.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


14

‘தடுப்பார் யாரே!’


“குமிழ்த் தெழுந்த சீர்மறந்த தமிழர் தம்மைக்
கூட்டுவிக்க, யெம் வாழ்வின் நலத்தை முற்றும்
உமிழ்த்தொதுக்கி, இரவுபகல் மறந்து, பேணும்
ஒருதுணைவி நலம்மறந்து, பெற்ற மக்கள்
அமிழ்தொத்த சொல்மறந்து, பெற்றோர் தம்மை
அடியோடு மறந்தேனை அணைத்துக் கொண்ட
தமிழ்த்தாயும் மறந்ததனால் மறந்தீர் போலும்
தங்குமுயிர் உடல் மறந்தால் தடுப்பார் யாரே!”

-1961





15

பாச்சுடர்!



செந்தமிழ்ப் பாட்டுநூ றாயிரங் கூறவென்
நெஞ்சந் துடிக்குது காண்- அதில்
தந்தனதோம் தனதோம் தனதோமென
தாளங்கள் கேட்பன - காண்!
சிந்தையுள் பற்பல எண்ணங்கள் காண்; அங்குச்
சீற்றம் மிகுந்திடல் காண் - உளம்
மந்திரப் பாவையின் கூத்தினைப் போல் - இந்த
மாநிலம் காட்டுதல் காண்!

கொட்டு முழக்கினைப் போல்அலை வார்கடல்
கோல நடத்தினைப் போல் - உயிர்
கட்டுத் தளர்ந்திட ஆர்த்திடல் காண் - பெருங்
காட்டு நெருப்பினைப் போல்!
வெட்டிச் சுடர்ந்திடும் மின்னலைப்போல்- புயல்
வீங்கி யலைப்பதைப் போல் - இடி
பட்டுச் சரிந்திடும் மாமலை போல் - உளம்
பாடிக் குதித்திடல் காண்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/69&oldid=1446022" இலிருந்து மீள்விக்கப்பட்டது