பக்கம்:கனிச்சாறு 7.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  25


ஏறுதல் காண்; பின் இறங்குதல் காண்; உடல்
ஏங்கி யிளைத்திடல் காண் - நிலை
மாறுதல் காண்; சுடர் மங்குதல் காண்; முது
மாலைக் கதிரவன் போல்!
வீறுதல் காண்; உளம் வீங்குதல் காண்! பல
வித்து முளைத்திடல் காண்! - அறி
வூறுதல் காண்; கரை மீறுதல் காண்! - புது
ஊற்றுச் சுனையதைப் போல்!

1962

 


16

நன்றியில் செல்வர்!


(கலிநிலைத் துறை)


நீயும் பொய்நின் நெஞ்சும் பொய்நின் நிலைதருக்கும்
வாயும் பொய்நின் வழியும் பொய்நின் வாழ்வும்பொய்!
தேயும் அன்புத் திறமும் பொய்யென் றெண்ணாமல்
போயும் நின்பால் ஓரீராண்டைப் புதைத்தேனே! 1

இன்றே செய்வம் அன்றே செய்வம் எனக்கூறி
அன்றன் றென்னை அழைப்பாய் ஏலா தனவுரைப்பாய்
ஒன்றே யவற்றுள் செய்தா யில்லை; உளமிறுகிக்
குன்றே போலும் நின்றாய்! எண்ணங் குலைந்தேனே! 2

மருளா நின்றேன்; என்னை யணைத்தே மகிழ்வூட்டி
அருளா நிற்பேன்; அஞ்சல் தவிர்கென் றுரைசாற்றிப்
பொருளால் என்னை நம்புதல் செய்தே புறங்கடையில்
இருளாம் வழியைக் காட்டினை; ஏகினை எனைவிடுத்தே! 3

வண்டமிழ்ந் தூறுங் கள்ளுண் வகையால், வறியவனெத்
தண்டமிழ்ப் பற்றால், நின்பொருட் பாங்கில் தமிழிருக்கக்
கண்டமிழ் தென்றே எண்ணிக் களித்தொரு கையள்ளி
உண்டுமிழ்ந் தேனது நஞ்சென் றறிந்தினி வுய்ந்தேனே! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/70&oldid=1446025" இலிருந்து மீள்விக்கப்பட்டது