பக்கம்:கனிச்சாறு 7.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


புன்செவி மகிழப் புகழ்ந்திடு முள்ளப் போலியரை
என்செவி கைப்பவென் னிருவிழி கரிப்பநின் னருகிருத்திப்
புன்மொழி கேட்டு நீயுவந் தவரால் பொருள்பறிக்கும்
நின்வழி சிறந்ததென் றியம்புவை யாயினென் நிகழ்த்துவனே! 5

சீரிற் குறைந்தவென் மனையு மாகருஞ் சிறப்புறவே
வாரிக் கொடுக்குவை எனயான் நின்பால் வரவில்லை!
தேரிற் படர்கென முல்லைக் கிரங்கித் தமிழ்காத்த
பாரிக் கிணைநிற் பாயென வந்தேன் நினைப்படர்ந்தே! 6

பின்னுறல் முன்னறிந் துணர்த்துமென் றுணைவி பேச்சிகந்து
பன்னரு நண்பர் நின்னுளங் கூறிய பயன்துறந்தே
என்னருந் தமிழ்க்கே இவன்றுணை என்றே இருகையால்
உன்னெடுந் தோளைப் பற்றினேன் ஊழ்த்தினை உயர்விகழ்வே! 7

தருவன் நீயிலை; தண்டமிழ்த் தாய்க்குத் தலைதாழ்த்தும்
ஒருவன் நீயிலை; உண்டிங் கோரா யிரமிளைஞர்!
புருவம் உயர்த்தித், தோளிரண் டுயர்த்திப் புடையெழுந்தால்
வருவது நின்போல் எப்பகை யாயினும் வணங்கிடுமே. 8

எக்கர் போலுநின் செல்வம்! எம்மோர்க் கிழிவுதரின்
பொக்கெனப் போதலும் சேய்மையிலில்லைப் பொலி நிலவைக்
குக்கல் ஒன்று குரைப்பதால் என்றுங் குறைவிலையே!
நக்கல் ஆகுநின் நிலையே! அதற்கொரு நாள்வருமே! 9.

தாழா திருந்து நாளுஞ் சிறக்குமெந் தாய்த்தமிழை
வாழா திருந்திடச் செய்தார் பலரும் வாழ்ந்ததிலை!
வீழா தெழுந்து வீறொடு நடக்கு மோர் வேழமதைப்
பாழாய்த் தடுத்து வீழ்த்துமோ ஆங்கோர்ப் பசும்புல்லே!

-1962
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/71&oldid=1446026" இலிருந்து மீள்விக்கப்பட்டது