பக்கம்:கனிச்சாறு 7.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


19

அவனொரு தனியன்; நடந்து கொண்டிருந்தான்!


ஊரவர் கேண்மோ! உலகவர் கேண்மோ!
சீருடைப் பாக்கள் செறிப்பக் கொளுத்தும்
வீறுடைப் பாவலர் விளம்பக் கேண்மோ!
நட்டார் கேளுதிர்! நயப்பார் கேளுதிர்!
ஒட்டார் கேளுதிர்! உவப்பார் கேளுதிர்!
இருநீர் வையத்து எழுந்துயிர்த் தியங்கும்
பெருநிலை மக்கள் பின்றைக் கேளுதிர்!

கொழுபொருட் குவட்டில் பிறந்தோன் அல்லன்;
எழுநிலை மாடத்து இருந்தோன் அல்லன்;
வகைதெரி கூட்டத்து வாழ்ந்தோன் அல்லன்;
தொகைநிறை வளங்கள் துய்த்தோன் அல்லன்;
புரையில் நெஞ்சன்; கறையில் கொள்கையன்!
வரையறு நுட்பம் வாங்கறி வுணர்வோன்!
அறம்பிற ழாத அறவோர் நெறிக்கே
வரம்பில் வேட்கையன்; வாழற்கு வாழாஅன்!
கொடுக்கை குறுக்கான்; பெறுகை பெருக்கான்;
உடுக்கை உவப்பிலன்; உண்கை குறியிலன்!
பிறநலம் விரும்பி! அறநலத் தும்பி!
பண்தேர்ந் துண்குயில்! பாடற்கு உளம்மயில்!
எழுத்தெழுத் தூர்ந்து சொற்சொல் புகுந்து
செழுந்தொடர் யாப்பில் நல்லுயிர் துவண்டு
பொருட்சுனை குளித்துப் புதுநலம் மூழ்கிப்
பாநறுந் தேறல் பருகிப் பருகி
வாழ்நறுந் தென்றல்! வாழ்ந்திலா வான்வில்!
கற்பனை விரிவான் கலைமுகில் ஏறிக்
கடக்கும் மடவோன்! கவின்தமிழ்க் கடிமை!
கூர்த்த நோக்கினன்; குனியாப் போக்கினன்!
ஆர்த்த வாயினன்; ஆராச் செவியினன்;
எண்ணிய நெஞ்சன்; திண்ணிய சொல்லன்;
நிலைத்த கருத்தன்; நிலையாச் சினத்தன்;
குலைத்த மடியினன்; குலையாத் துடிப்பினன்!
தாய்க்குநல் பிள்ளை; தந்தைக்குத் தக்கோன்!
மனைக்குநல் கொழுநன்; மகர்க்குநல் தந்தை!
நண்புக்கு அன்பன்; பண்புக்கு உறவோன்!
மன்பதை விரும்பி! மனந்தின் கரும்பு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/75&oldid=1446046" இலிருந்து மீள்விக்கப்பட்டது