பக்கம்:கனிச்சாறு 7.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


26

என் எண்ணம், எழுத்து, செயல், இயக்கம்!


என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை, சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்தப்
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!

கண்ணிலும் கருத்திலும் காதிலும் உயிர்க்கின்ற
காற்றிலும் மிளிர்வது தமிழேதான்! - என்
கவலைக்கும் கரணியம் அதுவேதான்! - உளம்
எண்ணியும் எழுதியும் எடுத்தெடுத் தியம்பியும்
இன்புறச் செய்வதும் தமிழேதான் - அதற்
கிணையென நிற்பதும் அதுவேதான்!
உடுக்கையில் உண்கையில் ஓரடி நடக்கையில்
உறக்கத்தும் வேறெதும் எண்ணி யறியேன் - மனை
உறவிலும் காதலைப் பண்ணியறியேன் - உயிர்
விடுக்கினும் தமிழெனும் நினைவொடு விடுத்திட
வேண்டுமென் றிறைவனைக் கேட்டுத் தொழுவேன் - ஒரு
வேற்றுமையும் இல்லையதில் உள்ளம் வழுவேன்!

என்மொழி தாய்மொழி, இன்மொழி அதைவிடுத்
தெவர்மொழி ஆயினும் கற்க மாட்டேன்! - வேறு
எவரையும் கைதொழ நிற்க மாட்டேன். ஒரு
புன்மொழி புலைமொழி புதுமொழி எதுவுமிப்
புலத்தினில் கால்வைக்க ஒப்ப மாட்டேன்! - கோடிப்
பொன்னுக்கும் தமிழ்மனம் விற்க மாட்டேன்!

(ஓரசை மாற்று)


மனைவிக்கும் மக்களுக்கும் மாளிகையில் வாழ்வதற்கும்
மற்றெதற்கும் பல்லிளிப்புக் காட்ட மாட்டேன் - தன்
மானமின்றிக் கையதற்கு நீட்ட மாட்டேன் - தமிழ்
நினைவுக்கும் செயலுக்கும் நீண்டநெடுந் தொண்டினுக்கும்
நீட்டியதோர் காசெனினும் கூச மாட்டேன் - என்னை
நிற்கவைத்துப் ‘போ’ எனினும் ஏச மாட்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/83&oldid=1446055" இலிருந்து மீள்விக்கப்பட்டது