பக்கம்:கனிச்சாறு 7.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


ஒன்றினை எண்ணியும் உதவியெண் ணியும்பல
உளவுகள் நினைந்தெனை நெருங்கிடலாம் - அவை
நன்றென முடிந்திடல் புகழ்வதுவோ? - நிலை
நலிந்திடில் முனிந்தெனை இகழ்வதுவோ?

பொதுநலம் நினைந்துநான் இயங்கையி லே - தனிப்
போக்கினுக் கொருகால் தடைவரலாம்! - உடன்
எதுவிளை வெதுசரி எனநினைந்தே - உயர்
வேற்றத்தைக் கருதிடில் முரண்வருமோ!

கதிரினை வானினை மழையினைக் கடலினைக்
காற்றினை யாவையும் நினைக்கையிலே - அவை
சிதர்தரும் ஒளி, வெளி, துளி, உலர்ப்பை - கடுஞ்
சீற்றத்தைக் கண்டுளம் வெறுப்பதுண்டோ?

-1974



28

உறுதியும் நன்றியும்!



எவரெனைத் தடுக்கினும் எவரெனைக் கெடுக்கினும்
என்கை வீசி நடையிடுவேன்! - ஒரு
சுவர்எனைத் தாங்கினும், துரும்பு கை கொடுக்கினும்
செந்தமிழ் மாலைகள் அவைக்கிடுவேன்!

மலையே குலுங்கினும், வானே இடியினும்
மனங்குலை யாமல்மேல் நடப்பேன்! - துயர்
அலைகளுக் கிடையோர் கட்டையே உதவினும்
அதன்திறம் நினைந்து புகழ் கொடுப்பேன்!

கடுஞ்சொல் வீசினும், கணைகளைத் தொடுக்கினும்
கடமையில் துவளேன்; வினைமுடிப்பேன்! - நான்
படுந்துயர்க் கிரங்கிக் கைகொடுப் போர்க்குப்
பைந்தமிழ் மாளிகை கட்டிடுவேன்!

எனைவெறுத் தாலும், எனைச்சிதைத் தாலும்
ஏற்றுள கொள்கைக் குயிர்தருவேன்! - ஒரு
தினையள வேனும் துணைவரு வோரைத்
தீந்தமி ழால்நிலை நிறுத்திடுவேன்!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/85&oldid=1446058" இலிருந்து மீள்விக்கப்பட்டது