பக்கம்:கனிச்சாறு 7.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


எதனைப் பார்க்கினும் எரிச்சல் படுமது!
குதலைச் சிரிப்பும் குடைச்சலே அதற்கு!
இல்லாது சொல்லி இருப்பது தவிர்க்கும்!
நல்ல சொற்களே நாவில் ஊறா!
நாற்றச் சொற்களே நறுக்கு நறுக்கென,
ஊற்றெடுத் ததனின் உளத்தொடு குதிக்கும்!
வெந்த உணர்வொடும் வேகாத அறிவொடும்,
சந்தனம் ஒருபுறம் சாணி ஒருபுறம்
இருந்தால், சாணியை எடுத்தெடுத்து முகர்ந்து 30
விருந்து போட்டதாய் எண்ணி வெதும்பும்!
ஒப்புர வில்லாது ஓயாமல் குடைந்து
குப்புறப் படுக்கும் குள்ள மனம், அது,
எவருடைய போக்கினும் எதிரேறிப் போகும்!
துவருடை பூணாத் துறவியே போலும்,
தண்ணீர் புகாத தக்கையே போலும்,
கண்ணீர் விட்டுக் கசிவதே போலும்,
எதனையும் நிறைவுறா திழித்து வெறுக்கும்!
புதைவதும் இல்லை! புலர்வதும் இல்லை!
சதையும் இன்றி எலும்பும் இன்றியோர் 40
விதையடிக் காத வெற்று நரம்பது!

இந்த மனத்தைத்தான் எந்தமிழ்ப் புலவோர்
வெந்தும் வேகாத மனமென விளம்பினர்!
தொண்டு பேணுவோர் தொடையில் எத்தனைக்
குண்டு குழிகள், வெள்ளை முடிகள் என
எண்ணிப் பார்த்தே எடுத்த கணக்கை,
உண்ணி பிடித்த நாய்அணற் றுதல்போல்
எந்தத் தாளிலோ எழுதி எழுதிச்
சொந்தத் தலைமயிர் புய்த்துப் புய்த்துச்
சொட்டையாய்ச் செய்து மொட்டையாய் நின்றது! 50
கட்டைபோ மளவும் இந்தக் கணக்குதான்!
ஐயா ஐயா அதன் பேர்
பொய்யா மொழியெனப் புகன்று கொண்டதே!

-1976
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/91&oldid=1446069" இலிருந்து மீள்விக்கப்பட்டது