பக்கம்:கனிச்சாறு 7.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  4


33

உள்ளத்தை ஒளியாமல் உலகில் பதிக்கிறேன்!


‘நினைத்ததை’ யெல்லாம் எழுதுகின் றேனாம்!
நினையாத தெல்லாம் எழுதப் புகுந்த - என்
நெடுநாள் நண்பர் ஒருவர்சொல் கின்றார்!
நினைத்தெழு தாமல் எதை,எழு துவது?
நினையாமல் எழுதும் ‘நிலை’ யெனக் கில்லையே!

‘எண்ணிய’ தெல்லாம் எழுதுகின் றேனாம்!
எண்ணாத தெல்லாம் எழுதப் புகுந்த - என்
இனிய நண்பர் ஒருவர்சொல் கின்றார்!
எண்ணி எழுதாமல் எதை,எழு துவது?
எண்ணாமல் எழுதும் ‘இழி’ வெனக் கில்லையே!

‘வந்ததை’ யெல்லாம் எழுதுகின் றேனாம்!
வாராத தெல்லாம் எழுதப் புகுந்த - என்
வாழ்கின்ற நண்பர் ஒருவர்சொல் கின்றார்!
வந்ததை எழுதாமல் எதை,எழு துவது?
வராததை எழுதும் ‘வழக்’கெனக் கில்லையே!

‘கண்டதை’ யெல்லாம் எழுதுகின் றேனாம்!
காணாத தெல்லாம் எழுதப் புகுந்த - என்
கனிவான நண்பர் ஒருவர்சொல் கின்றார்!
கண்டெழு தாமல் எதை,எழு துவது?
காணாமல் எழுதும் ‘கை’ எனக் கில்லையே!

‘மனம்போன’ வாறெலாம் எழுதுகின் றேனாம்!
மனம்போகா வாறெலாம் எழுதப் புகுந்த - என்
மதிப்புடை நண்பர் ஒருவர்சொல் கின்றார்!
மனம்போன தெழுதாமல் எதை, எழு துவது?
மனம்போகா தெழுதிடும் ‘மலிவு’ எனக் கில்லையே!

‘உள்ளத்தை’ ஒளியாமல் உலகில் பதிக்கிறேன்!
உலகுக்கு ஒளியாமல் உள்ளதைச் சொல்கிறேன்!
கள்ளத்தைப் பழகிடும் ‘கணக்கு’ எனக் கில்லை!
காசுக்கு எழுதிடும் ‘கர’ வெனக் கில்லையே!

-1976
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/92&oldid=1446073" இலிருந்து மீள்விக்கப்பட்டது