பக்கம்:கனிச்சாறு 7.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  49


தோளுக் கென்றும் தொய்வில்லை என்
தொண்டுக் கென்றும் நைவில்லை!
வாளுக் கென்றும் பழுதில்லை! - என்
வாழ்வும் தமிழும் ஒன்றன்றோ!

-1977



35

என் உடலும் உயிரும் நானும்!



என்னை விளங்கிக் கொள்ளா தவருளென்
மனைவியும் மக்களும் முதலில் நிற்பவர்;
அன்னையுந் தந்தையும் அவர்களை அடுத்தவர்;
அன்பரும் நண்பரும் அவர்களின் பின்னவர்!
பொன்னையும் பொருளையும் புறம்பார்ப் பவர்க்கும்
பொய்யும் புனைவும் திறம் பே சுவர்க்கும்
தன்னை யறிவதோ, தன்னை யறிந்தபின்
தவறிலா என்னை யறிவதோ பெரும்புதிர்! 1

வீடும் வாயிலும் விளங்குதல் வேண்டும்;
வீணரின் பேச்சுக் கிசைந்திடல் வேண்டும்;
ஓடும் தங்கமும் ஒக்கக் காணுமென்
உணர்வைக் கொன்(று), அவர்க் குவந்திடல் வேண்டும்!
தேடும் பொருள்களில் பங்கென்ன வென்பார்;
நீங்கிலா மனத்தையும் அறிவையும் மதியார்!
நாடும் மக்களும் நறுந்தாய்த் தமிழையும்
நலிவு நீக்குமென் நயத்தையும் உணரார்! 2

தீதிலா என்னுளத் தெளிவையும் தேரார்;
தேய்விலா அதனொளித் திறமையும் அறியார்!
ஓதிலா நிலையொடு வந்தெனை அளப்பார்;
ஒருகை ஒருமுழம் ஒருமார் பென்பார்!
ஏதிலா வினைபல இயங்கிடும் புல்லியர்
என்வினை முதல்இழப் பூதியம் கேட்பார்!
மூதிலா இளமையர் பிஞ்சினர் குடுக்கையர்
மூத்தஎன் உணர்வெழும் பாத்திறன் நிறுப்பார்! 3

பூவொடும் பிஞ்சொடும் காயொடுந் தழையொடும்
புலம்புலம் நிற்பவர், பழுத்துக் குலுங்குமென்
ஈவொடும் பேறொடும் இணையெனப் பேசுவர்;
இன்னுஞ் சிலரெனை இழிவொடும் ஏசுவர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/94&oldid=1446079" இலிருந்து மீள்விக்கப்பட்டது