பக்கம்:கனிச்சாறு 7.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  51


36

அன்றையும் இருந்தேன்; இன்றையும் இருந்தேன்;
என்றையும் இருப்பேன்!


காற்றோடு காற்றாய் உருக்கரந் திருந்தேன்!
கதிரொடும் ஒளியாய் இருந்தேன்!
ஊற்றொடும் ஊற்றாய் உருவெளிப் பட்டேன்;
ஒழுகுவெள் ளருவியாக் குதித்தேன்!
ஆற்றொடும் ஆறாய் அகல்வழி நடந்தேன்;
ஆழியிற் கலந்துடல் பரந்தேன்!
நாற்றோடு நாற்றாய் நல்வயல் விளைந்தேன்!
நறுநெல் மணியெனப் பொலிந்தேன்! 1

மேலொளி வானில் முகிலொடு மிதந்தேன்;
மின்னலில் இடியினில் தெறித்தேன்;
காலொழி விசும்பில் கண்ணிமை மீனக்
காட்டிடை ஊழிபல் ஒளிர்ந்தேன்!
பால்வெளி மண்டிலப் பாதையில் திரிந்தேன்;
பாழினுள் நெடுநாட் புதைந்தேன்!
வாலறி மெய்ப்பொருள் வாய்த்துயிர் கலந்து
வாய்க்கொணா இன்புணர்ந் திருந்தேன்! 2

தென்றலிற் கலந்து பூவோடு மணந்தேன்!
தேன்எனத் தும்பியுட் புகுந்தேன்!
குன்றிடைக் குருவிக் குழாத்தொடு பறந்து
குயிற்கிளி இசையொடு பேசி,
மென்றுமிழ் கோதில் மீள்வெளிப் பட்டு
மேய்தரு பசும்புலாய் விளைந்தேன்!
தின்றமிழ் தளிக்கும் ஆவொடு மேவித்
திரிதரு விலங்கொடு திரிந்தேன்! 3

அன்றையு மிருந்தேன்; இன்றையு மிருந்தேன்;
ஆனபின் என்றையும் இருப்பேன்!
ஒன்றையுந் தவிரா துயிருணர் வுடலாய்
ஒன்றினுள் ஒன்றாய் உயிர்ப்பேன்!
என்றையு மில்லா இருள்நினை வில்லேன்!
என்றையும் பின்றையு மிருந்தேன்!
மன்றையும் நிறைத்து மனத்தையும் குவித்து
மலர்த்துமெய்த் தமிழாய் மணப்பேன்! 4

-1978
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/96&oldid=1446088" இலிருந்து மீள்விக்கப்பட்டது