பக்கம்:கனியமுது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

மேளமில்லை; தாலியில்லை; சாட்சி யில்லை;
    விருந்துமட்டும் அருந்திவிட்டு மணம்மு டித்தார்,
தாளமில்லாச் சங்கீதம் சுவைக்கா தன்றோ?
    தவழ்கின்ற மழலையின்றிக் குடும்பம் ஏது?
நாளைமட்டும் எண்ணிவந்தால் போதும்; மாதம்
    நாலைந்து முடிவதற்குள், இரண்டு தங்கப்
பாளமெனப் பெண்ணுென்றும், ஆணாய் ஒன்றும்
    படைத்திட்டார்! ஆணுக்கோ கண்கள் இல்லை!


இரங்துண்ணுங் குலத்தொழிலைக் காப்ப தற்கே
    இருபிள்ளை பெற்றுவிட்ட பிச்சைக் காரி
இறந்திட்டாள் அவளைப்பின் பற்றித் தந்தை
    இறக்குமுன்பு, பெரியவளாம் மகளிடத்தில்,
மறந்திடாதே, தம்பியை, உன் உயிர்போல் எண்ணி
    வளர்த்திடுவாய்! எதுவரினும் அவனே விட்டுப்
பிரிந்திடாதே' என்றுரைத்தே மாண்டு போனான் !
    பேதையவள் தலையசைத்தே உறுதி தந்தாள்!

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/17&oldid=1383240" இலிருந்து மீள்விக்கப்பட்டது