பக்கம்:கனியமுது.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

என்செய்வேன்? என்குற்றம் ஆகா தன்றே!
    இளமைமுதல் என்செழித்த முகத்தில் தேங்கும்
புன்சிரிப்பும், கன்னத்தில் குழியும்-காண்போர்
    புலனையெலாம் என்பாலே ஈர்க்கும்; தஞ்சை
நன்செய்போல் நயப்பார்க்கு நலன்வி ளைக்கும்
    நற்பண்பா டுடையவள்நான் என்றும்; மாறாய்
வன்செயலுக் கிருப்பிடம்என் தோழி என்றும்
    மற்றவர்கள் கூறுகின்ற வழக்கம் உண்டு!


பெருஞ்சிரிப்பு விரவுகின்ற முகத்தோ டொன்றும்
    பேசாது வரவேற்றாள் தனிய றைக்குள்!
“வருஞ்செய்தி தெரிந்ததனால் காத்தி ருந்தேன்;
    வாடி, என்றன் தோழி, உனக் கேற்ற தாகத்
தரும்பரிசை ஏற்றுக்கொள்!” என்று கூறித்
    தடாலென்று குரல்வளையை நெறிக்க லானாள்!
விரும்பியது கிட்டாத வெறுப்பால் வந்த
   வினையிதுவோ விரைந்தோடிப் பிழைத்தேன்யானே!

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/91&oldid=1383226" இலிருந்து மீள்விக்கப்பட்டது