பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

51


இயற்கையைப் பற்றிய இன்றைய மேனாட்டுச் சிந்தனையாளர்களின் கருத்துக்கும், கன்பூசியசின் சிந்தனைக்கும் இடையே பெருத்த ஒரு வித்தியாசம் இருப்பதை நாம் காணலாம்.

வானகத்து வின்மீன்கள், கோள்கள் போன்ற இயற்கையின் அற்புதங்களைக் கண்டு வியக்கும் மேனாட்டுத்தத்துவ ஞானிகள் கூட, நமக்கு மேலே உள்ள வானக சக்திக்கும், மனிதர்களுக்குள்ளே உள்ள ஒழுக்க நெறிகளுக்கும் இன்றுவரை சம்பந்தப்படுத்தியே பார்க்கவில்லை.

வானகத்துச் சக்தியும், மனித ஒழுக்க நெறிகளின் சக்தியும் ஒன்றோடு ஒன்று இசைந்து போகும் நோக்கு உள்ளவை என்று கன்பூசியஸ் சிந்தனை செய்து கூறி உள்ளார்.

'மனித தத்துவமும், வானகமும் ஒன்று சேர்த்துதான், இந்த உலகத்தை இயக்குகின்றது. இதில் மனிதன் ஒரு முக்கியமான உறுப்பினன் ஆவான். இந்த இருசக்திகளும் இணைந்து இயங்க வேண்டியவை. இந்த இணைப்பில் மனிததத்துவம்தான், சகலவிதமான இயற்கை அழிவுகளுக்கும் காரணமாக இருக்கின்றது. அதனால், இயற்கை நியதியை ஒரு நிலையான, சீரான, ஒழுங்கு நிலையில் காத்து வருவது மனிதனின் கடமையாகின்றது என்கிறார் கன்பூசியஸ்:

ஒழுக்க ரீதியாகவும், மண், விண், காற்று, வான், நீர் என்ற ஐம்பூதங்கள் இயக்கத்தின் படியும், ஒரு விளைவை உண்டாக்கிட வானகத்திற்கு வழிவகைகள் உண்டு. உலக இயக்கத்தின் இயல்பான இந்த அறநெறிகள் வெளிப்படையாக, உடனே தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், ஒவ்வொன்றின் வீழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் உரிய மூலாம்சங்கள், அதனதன் உள்ளே அடங்கி இருக்கின்றன என்பதுதான் உண்மை.