பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

கன்பூசியஸின்


எடுத்துக்காட்டாக, மோசமான ஓர் அரசாங்கம், அதன் வீழ்ச்சிக்குரிய கிருமிகளைத் தன்னிடமே சுமந்து கொண்டிருக்கின்றது. அது போலவே, ஒரு நல்ல அரசாங்கம் வளர்ந்தோங்குகின்றது, என்பதும் உலக வரலாறு நிரூபித்துக் காட்டிய உண்மைகளாகும்.

வானகத்தின் சட்டங்களுக்கும், பூமியின் நீதிக்கும் ஏற்ப வீழ்ச்சியும், எழுச்சியும் உலக வாழ்வில் அவ்வப்போது தோன்றுகின்றன.

தவறுகள் ஏற்படும் போது உலகியல் திட்டமும் தடம் புரளும்; வானகத்து நெறிக்கு மாறாக உலகில் அநீதிகள் ஏற்படும்போது, யுத்தங்களும், பூகம்பங்களும், வெள்ளமும் கொந்தளிப்பும், கொள்ளைநோய் போன்ற பேரழிவுகளும் சீரழிவுகளும் ஏற்படும் என்கிறார்.

எனவே, இயற்கை நெறியும், மனிதநெறியும் வெவ்வேறானவை அல்ல; ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவை தான். இந்தத் தத்துவம் மனித சிந்தனைக்கு இன்றும் அவசியமானதாகவே இருக்கிறது.

ஒரு தனி ஜடப்பொருளின் இயக்கமாக இயற்கையைக் கருதும் இன்றைய விஞ்ஞானச் சிந்தனை, இயற்கையை மீறும்படியான விஞ்ஞான அறிவை மனிதனிடம் வளர்ந்து விடுகின்றதே தவிர, இயற்கை நிகழ்ச்சிகளின் போக்கையும், உலகியல் சம்பவங்களையும் பொருளற்றதாக்கி, மனிதனை அவற்றிற்கு சக்தியற்றவனாக்கி வெறும் ஜடப் பொருளாக்கி விடுகின்றது.

அதற்கு மாறாக, மனிதர்களாகிய நம்முடைய செயல்கள் அனைத்திற்கும்-உலக நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தம் உன்டு என்று கூறுகின்ற கன்பூசியஸ் தத்துவம், அதீதமான ஓர் ஆத்மீகச் சக்தியையும் நமக்கு வழங்குகின்றது.