பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கன்பூசியஸின்

5. ஞானி கன்பூசியஸ் வாழ்க்கை வரலாறு

சீன நாட்டின் மாபெரும் ஞானி மட்டுமல்ல; உலகம் முழுவதும் போற்றிக் கொண்டாடப்படும் பொதுவான ஒரு தத்துவ ஞானி கன்பூசியஸ்.

ஞானி என்றால், ஏதோ முற்றும் துறந்து, உலகியலை உதறி, இல்லற வாழ்க்கை விட்டு ஒதுங்கி வன வனாந்திரங்களைச் சுற்றிக்கொண்டு, காயோ கனியோ, கந்த மூலமோ, புற்றோ, புதரோ, கட்டாந்தரையோ என்று உண்டு உறங்கி, ஆடைகளற்று அல்லது அம்மணமாய் திரிந்து, போகியாக இருந்தவன் யோகியாக மாறி ஊர்களுக்கு உபதேசம் புரியும் புராணக் காலத்துப் பரமார்த்திக சந்நியாசியாகி, 'காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா' என்று பாடித்திரிந்த ஞானி என்ற பெயரை பெற்றுக் கொண்டவர் அல்லர் கன்பூசியஸ்.

உலகுக்கு அறம் போதித்த திருவள்ளுவர் பெருமானைப் போல, நல்லறமே இல்லறம்; பெண்ணின் பெருந்தக்க யாவுள?. மங்கலம் என்ப மனைமாட்சி, உலகுக்கு வாழ்வறம் வகுத்து, மக்களோடு மக்களாய் மாண்புடன் வாழ்ந்து, நடை முறை வாழ்வுக்கு அரசியல் ஞானம் போதித்து, சாதாரண ஏழை மக்களும் பின்பற்றக் கூடிய கர்ம மார்க்கத் தொண்டுகளாற்றி நானும் ஒரு மனிதன் தான் என்று வாழ்ந்துகாட்டிய ஞானி கன்பூசியஸ்!

கன்பூசியஸ் சீன நாட்டு மக்களுக்குக் கூறிய நல்லறங்களை, அந்த நாட்டு மக்கள் ஏதோ ஒரு மத போதனை போல பயபக்தியோடு ஏற்றுக் கொண்டார்கள் என்றாலும், அவர் மதவாதி அல்லர்; மதத்தை உருவாக்கிய மாபெரும் மகானும் அல்லர்!

கன்பூசியஸ் அறநெறிகள்-சீன மக்களை நல்வழி நடத்திச் செல்லும் ஞானோபதேசங்களாக இருந்தன! அதனால்