பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

65


அதற்கு கன்பூசியஸ், "ஆமாம், அவ்வாறுதான் என்றாலும், சாதாரண மனிதர்களைவிட, உயர்ந்த ஒரு பதவியை ஏற்க எந்த மனிதனும் விரும்பத்தான் செய்வான்’ என்றார்.

இப்பதவியை அவர் ஏற்ற பிறகு, கன்பூசியஸ் அரசியலில் நல்ல பல மாறுதல்களையும் காரியங்களையும் தோற்றுவித்து மிகத் திறமையுடன் செயல்பட்டதை மக்கள் விரும்பி வரவேற்றுப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

சீரும் சிறப்புமாக 'லூ' அரசு ஆளப்பட்டு வருவதைக் கண்ட 'ட்ரீ' அரசின் சீமானுக்குப் பொறாமை ஏற்பட்டது. 'லூ' அரசின் மக்கள் வாழ்வைக் கண்டு, தனது அரசின் மக்களும், ஊழியர்களும் 'லூ' ஆரசு வாழ்க்கை வசதிகளைப் போல எமக்கும் வேண்டும் என்று விரும்பிக் கேட்பார்களோ என்று கூட 'ட்ரீ' அரசின் சீமான் அஞ்சினான்.

அதனால், அந்த மன்னனைச் சார்ந்தவர்கள் சிலர் கன்பூசியசை அந்த நாட்டின் அரசியலில் இருந்து வெளியேற்றிட சில நயவஞ்சகமானத் திட்டங்களைத் தீட்டினர். முதலமைச்சருக்குக் காணிக்கை என்ற பெயரில், லஞ்சமாகச் சில நிலங்களையும்-பணத்தையும் ஓர் அமைச்சர், சில முக்கியஸ்தர்கள் மூலமாக அனுப்பி வைத்தனர்.

கன்பூசியசின் அரசியல் நேர்மையைத் திசை திருப்பிட அவரை அரசியலிலே இருந்து கவிழ்க்கும் நோக்குடன் செய்த சூழ்ச்சிகள்; அவரிடம் வெற்றி பெறாததால், "ட்சி" அரசினர் அழகிகளை அனுப்பி அவரை வீழ்த்த முயற்சித்தார்கள்.

'ட்சி' அரசன் அனுப்பிய ஆடல் பாடல் அழகிகள் எண்பது பேர்களுடன் 'லூ' அரசின் அதிகாரிகளும், மன்னனும் மயங்கிக் கிடந்தார்கள் அவர்களை அந்த சுகபோகக் களியாட்டங்களிலே இருந்து மீட்டிட கன்பூசியஸ் செய்த முயற்சிகள் எல்லாம் பாழாயின.