பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கன்பூசியஸின்


கன்பூசியஸ் தனது சீடர்களிடம், பெண்ணின் நாவைக் கண்டு பயப்படு; அது உன்னைத் தீண்டிடும் பாம்பின் விஷம்" என்று கூறிவிட்டு, தனது மாணவர்களுடன் அந்த நாட்டை விட்டே வெளியேறிச் சென்றுவிட்டார்.

ஆனால், அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறி விட்டதற்கு வரலாறு வேறு ஒரு சம்பவத்தைக் கூறுகின்றது. அதாவது, கன்பூசியசின் நேர்மையான ஆட்சி மக்கள் இடையே எதிர்ப்புகளை ஏற்படுத்தியதாகவும், அவர் நாட்டில் சிதறிக்கிடக்கும் எல்லா சக்திகளையும் ஒன்று திரட்டி ஒரே தலைமையின் கீழ் குவித்து நாட்டின் சக்தியை ஒரு முகப்படுத்தி, ஒரே ஆட்சி முறையை உருவாக்க வேண்டும் என்று திட்டம் போட்டார் என்றும், அதனால் சிறிய சிறிய குறுநில அரசர்களும், பதவியாசைப் பிடித்த இளைய தலைமுறையினரும், அவரை நாட்டைவிட்டே விரட்டியடித்து விட்டார்கள் என்றுக் காரணம் கூறுகிறது வரலாறு.

எது உண்மையோ; ஆனால் ஒன்று மட்டும் உண்மை என்று புரிகிறது. கன்பூசியஸ் தனது நாட்டைச் சொந்த ஒரு அரசாங்கத்தின் கீழ், அதிக செல்வாக்குடன் வெற்றிகரமாக, தனது அரசியல் பணிகளையும் பரிசோதனைகனையும் நடத்தி வந்தது பலருக்குப் பிடிக்கவில்லை; அதனால் அவரை வெளியேற்றச் சதி செய்து துரத்தி விட்டார்கள்.

ஆனால், இந்த நேரம் கன்பூசியஸ் என்ற ஞான மகானுக்கு ஒரு சோதனைக் காலமாக அமைந்து விட்டது. தனது நடுத்தர வயதையும் தாண்டி வயோதிகத்தின் வாசலிலே அவர் நுழைந்து விட்டார்; தனக்கு என்ற ஓர் ஆதரவை வழங்கிடும் நாடு இல்லை; தங்கவோ ஒரு வீடு இல்லை; உற்றார் உறவினர் யாருமில்லை; தனது மாணவர்கள் உண்டு; தன்னிடமுள்ள ஞானச்செறிவு உண்டு என்ற நிலையிலே அவர் நாடோடியாகவே அலைந்துகொண்டு இருந்தார்.