பக்கம்:கபாடபுரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

99


கண்ணுக்கினியாளின் - ஆடல் பாடலை நினைவூட்டியது. இப்போது வெகு தொலைவிலிருந்து செவியை அணுகும் அந்த நெய்தற்பண்ணும் அவளுடைய குரலைப்போலவே இருந்தது. எதிரே தீயணைந்து வெறும் புகைமட்டும் எழும் கலங்கரைவிளக்கத்துப் பாறையில் அந்தப் புகை எழுச்சியும்கூட ஒரு மோனமான சோகத்தைக் குறிக்கும் அடையாளம்போல் தோன்றியது. நெஞ்சின் இரங்கலைத் தத்ரூபமாக எடுத்தியம்ப நெற்தற்பண்ணைவிட வேறு சிறந்த இசையில்லை. இப்போது இந்த வைகறையில் எங்கிருந்தோ தொலைதுாரத்துக் கந்தர்வ உலகிலிருந்து வருவதைப்போன்று மெல்லிய ஒலியலைகளாக வரும் இந்தக் குரலோ - 'இது நெய்தற்பண்' - என்று கண்டுபிடிக்க முடிந்ததைவிட 'நெய்தற்பண் இப்படித்தான் இருக்கவேண்டும்' - என்று வரையறுக்கும் அழகிய எல்லையாகவே கொள்ளத்தக்க தாயிருந்தது. அருங்காலையின் மங்கலான ஒளியில் கடலருகே புன்னைப் பூ மணக்கும் சூழலில் வந்த இசைக் குரலில் மனமுருகி நடந்துகொண்டிருந்த சாரகுமாரனுக்கு வேறு கடமைகளை நினைவூட்டலானான் முடிநாகன்.

"முரசமேடைக்கரந்துபடையிலிருந்துசெல்லும் இரகசிய வழிகள் எங்கெங்கே போய் முடிகின்றன என்று கண்டு பிடித்துவிட்டதற்காக மட்டுமே முதிய பாண்டியர் நம்மைப் பாராட்டிவிடமாட்டார். அரச குடும்பத்து மதிநுட்பம் சாதாரண ஒற்றர்களைப்போல் புறச் செய்திகளை அறிவதற்காக மட்டும் பயன்படக்கூடாது. தோற்றம் அதன் பின்னுள்ள கருத்து கருத்தின் பின் மறைந்திருப்பதாகத் தோன்றும் உட்கருத்து - இறுதியாக அவை பற்றிய நம் அநுமானங்கள் - எல்லாவற்றிற்கும் மேலாகத் தொகுத்துணரும் ஞானம் - ஆகிய அனைத்தும் வேண்டுமென்று கூறியிருக்கிறார் பெரியவர். வெறும் தைரியத்தையும் ஆர்வத்தையும் கண்டு அவர் ஏமாறமாட்டார். ஆகவே இந்த முரசமேடைக்குக் கீழே உள்ள வழிகள் பற்றி இன்னும் அதிக நுணுக்கமான உண்மைகள் எவையேனும் நம் கவனத்திலிருந்தோ, சிந்தனையிலிருந்தோ தப்பியிருந்தால் அவற்றையும் கவனித்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/101&oldid=490025" இலிருந்து மீள்விக்கப்பட்டது