பக்கம்:கபாடபுரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

கபாடபுரம்


குனிந்து புன்னைப் பூக்களைத் தொகுத்துப் பொறுக்கிக் கொண்டிருந்தவள் அருகே மணற் பரப்பில் இலோசாகத் தெரியத் தொடங்கியிருந்த நிழலைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்த போது சாரகுமாரன் எதிரே புன்னகை பூத்தபடி நின்றான். முதலில் அவளுக்குத் திகைப்பாயிருந்தது. அவனுடைய நகர் பரிசோதனைக் கோலத்தைப் பிரித்துக் கணித்துத் தனியாக அவனை மட்டும் அவள் உணர்ந்து கொள்ளச் சிறிது நேரம் ஆயிற்று.

"ஓ! கபாடபுரத்து முத்து வணிகர் அல்லவா நீங்கள்?" என்று அவள் வினாவிய குரலில் குறும்பு நிறைந்திருந்தது.

"இந்த அதிகாலையில் இப்படி நெஞ்சு நெகிழ நெய்தற் பண் பாடும்படி அத்தனை பேரிரக்கம் என்னவோ தெரியவில்லையே?" என்று சாரகுமாரனும் குறும்புடனேயே வினாவினான்.

"உணர வேண்டியவர்களுக்குக் கூடப் புரியாத இரக்கத்தினால் பயன்தான் என்ன?"

"புரியவில்லை என்று நீ எப்படிச் சொல்ல முடியும் பெண்னே?"

"புரிந்திருந்தால் வினாவியிருக்கக் கூடாது."

"வினவினால் சம்பந்தப்பட்டவர்கள் வாய்மொழி யாலேயே மெய்யைத் தெரிந்துகொள்ளலாம் என்று நோக்கமாயிருக்கலாம்..."

"யார் கண்டார்கள்? கூசாமல் பொய் சொல்லுகிறவர்களுக்கும் கல்நெஞ்சுக்காரர்களுக்கும் எந்த நோக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்!"

"கல்நெஞ்சாயிருந்தால் உன்னுடைய நெய்தற் பண்ணும் உருக்க முடியாமல் அல்லவா போயிருக்கும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/104&oldid=490028" இலிருந்து மீள்விக்கப்பட்டது