பக்கம்:கபாடபுரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

கபாடபுரம்


புலர்கின்றன. என்னுடைய நாள் இன்று பாக்கியத்தோடு விடிந்திருப்பதாக நான் நினைக்கிறேன் பெண்ணே நான் இப்போது சற்றுமுன் கேட்டதும் அழகு. இதோ என் முன் காண்பதும் அழகு."

- இப்படி அவன் கூறிக்கொண்டே வந்தபோது கடற்புறத்திலிருந்து பலமாக வீசிய காற்றினால் மேலே இருந்த புன்னைமரக் கிளைகள் ஆடி அசைந்ததன் காரணமாகக் கொட்டினாற்போல ஒரு கொத்துப் பூக்கள் கண்ணுக்கினியாள் மேல் உதிர்ந்தன. பூக்கள் வேகமாக உதிர்ந்ததற்கே நொந்து வருந்தினாற்போல் காற்றைக் கடிந்து கூறியவாறே விலகினாள் அவள்.

"ஏன் விலகுகிறாய்? மலரை நோக்கி மலர்கள் உதிர்வதுதானே இயல்பு?"

"ஆகா கேட்பானேன்? கபாடபுரத்து முத்து வணிகர்களுக்கு எது வருகிறதோ, வரவில்லையோ, நன்றாகப் புகழ வருகிறது. இனிமேல் உங்களை முத்து வணிகரென்று சொல்வதுகூடத் தவறு. அன்று முத்து வணிகரென்று சொல்லிக் கொண்டீர்கள். அதற்குப்பின் ஒருநாள் அரண்மனைக் கொலுமண்டபத்தில் பார்த்தேன். பின்னொரு சமயம் தேர்க் கோட்டத்துக் கூட்டத்தில் உலாவில் பெரியபாண்டியருடைய தேருக்கு அடுத்த அலங்காரத் தேரிலிருந்து இறங்கி வந்தீர்கள். இன்று காலையிலோ - அவையெல்லாம் பொய்யாக இப்போது இப்படிப் பழந்தீவுக் கொலை மறவர்களான அவுணர்களைப்போல் கோலத்தில் வந்து நிற்கிறீர்கள்... நீங்கள் யாரோ ஒரு மாயா விநோத மனிதராயிருக்கவேண்டும்... நீங்கள் உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்பவை பொய்கள். அந்தப் பொய்கள் உங்களைப் பற்றிய உண்மையைத் தெரிவித்துவிடும் அளவுக்குப் பலவீனமான பொய்களாயிருக்கின்றன."

"நீ குற்றம் சுமத்துவதுபோல் பொய்கள் எவற்றையும் நான் கூறவில்லை என்பதை மறுபடியும் வற்புறுத்திச் சொல்ல விருப்புகிறேன் பெண்ணே..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/106&oldid=490030" இலிருந்து மீள்விக்கப்பட்டது