பக்கம்:கபாடபுரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. நகரணி மங்கல நாள்

வசீகர சக்திவாய்ந்தவனும் பேரழகனுமான இளவரசன் சாரகுமாரனைக் காணப் பாண்டியர் கோநகரத்துக்கு வடபால் சிறிது தொலைவில் அமைந்திருக்கும் மணிபுரம் எனப்படும் மணலூர்புரத்துக்கு முதலில் போகலாம், வாருங்கள். மாறோக மண்டலத்துக் கொற்கையினருகே பொருநை நதிக் கரையிலே பசுஞ்சோலைகளிடையே - ஊரிருப்பதே வெளியே உருத்தெரியாத பசுமையில் மறைந்திருக்கும் இந்த மணலூரின் அமைதி கபாடபுரத்தில் இராது. நாளைக்கு விடிந்தால் கபாடபுரத்தில் நகரணி மங்கல நாள். கோநகரத்தில் எங்கு நோக்கினும் கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும்.

பெரிய மாமன்னர் வெண்தேர்ச் செழியரின் தேர்க் கோட்டத்திலிருந்து அவருடைய மூவாயிரம் முத்துத் தேர்களும் அலங்கரிக்கப்பெற்றுச் சித்திரா பெளர்ணமி நிலவொளியில் மின்னி மின்னிப் பல்லாயிரம் எதிர் நிலவுகள் நிலவை நோக்கிப் பிறந்து வருவனபோல் கபாடபுரத்தின் அரசவிதிகளில் உலாவரும். இந்த ஆண்டின் சிறந்த முத்துக்களும், இரத்தினாகரங்களில் எடுத்துக் குவித்துப் பட்டை தீட்டிய மணிகளும் கடை வீதிகளில் வந்து குவிந்து கிடக்கும்.

நகரின் குமரி வாயிலாகிய முதன்மைக் கோட்டை வாயிலில் பெரிய மன்னர் காலத்தில் முதல் முதலாக நிறுவி நிலைவைக்கப்பட்ட இரண்டு பெரும் பனையுயரமும் - இரண்டு பெரும் பனையகலமு முள்ள தெய்விகச் செம்பொற் கபாடங்களில் முத்துச்சரங்களைத் தொங்கவிட்டுத் தீபாலங்காரம் செய்ததுபோல் பிரகாசம் உண்டாக்கியிருப்பார்கள். மறுபடி கடல் பொங்கி வந்தாலும் தாங்க வேண்டும் என்பது போல் இந்த வலிமையான கபாடங்களையும் கோட்டைமதிற் சுவர்களையும் வெண்தேர்ச் செழியர் - பெருமுயற்சி செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/11&oldid=489910" இலிருந்து மீள்விக்கப்பட்டது