பக்கம்:கபாடபுரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

கபாடபுரம்


உயர்ந்த இசையைக் கேட்க நேரும்போதெல்லாம் பொற் பூவும், பொன்னாரமும் அளிப்பது எங்கள் குடிவழக்கம். ஆனால் இப்போது இந்த விநாடியில் இந்த இடத்தில் என்னிடம் பொற் பூ இல்லாத காரணத்தால் உன்னைப்போலவே நானும் ஏழைதான். மறுக்காமல் இதைப் பொற் பூக்களாக ஏற்றுக்கொள் பெண்ணே....." என்று உணர்வு பொங்கக் கூறியபடியே கிளையை வளைத்து இரண்டு பெரிய புன்னைப் பூக்களைக் கொய்து அவளிடம் நீட்டினான் சாரகுமாரன்.

அவள் நாணத்தோடு அவற்றை வாங்கிக்கொண்டு வணங்கினாள். அவன் முடிநாகனை நோக்கி விரைந்தான். அவள் தோழிகளும் அவளை நெருங்கி வந்துகொண்டிருந்தனர். அந்தப் பூக்களை நுகர்ந்தபோது அவைமட்டும் தனியே நிறைய மணப்பதுபோல உணர்ந்தாள் கண்ணுக்கினியாள்.


15. பழந்தீவுப் பயணம்

இளையபாண்டியனும், முடிநாகனும் அரண்மனைக்குத் திரும்பியபோது நன்றாக விடிந்து வெயிலேறியிருந்தது. நீராடிக் காலைக் கடன்களை முடித்த பின்னர் இருவரும் பெரிய பாண்டியரைச் சந்திக்கச் சென்றார்கள். முடிநாகன் மட்டும் உற்சாகமின்றி இருந்தான்.

"பெரியபாண்டியரிடம் நமது சாதனைகளாகவோ, வெற்றிகளாகவோ கூறுவதற்கு ஒன்றுமில்லாமல் போகிறோம் சாரகுமாரரே சுரங்கப் பாதைகள் தொடங்குமிடத்தையும், முடியுமிடத்தையும் கண்டுபிடித்து அறிந்துகொண்டோம் என்று நாம் கூறுவதை அவர் பொருட்படுத்தி மதிக்கவே மாட்டார். ஏற்கெனவே உங்கள்மேல் அவருக்கு ஒரு குறை இருக்கிறது. அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கலை ஆர்வமோ, முனைப்போ அளவுக்கதிகமாக இருப்பதை மறுக்கிற மனம் அவருடையது. கலைகளில் ஆர்வம் காண்கிறவன் விருப்பு வெறுப்புக்களில் அழுந்தி நிற்கிற மெல்லிய மனப்பான்மையை அடைந்துவிடுகிறான். இந்த மெல்லிய மனப்பான்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/110&oldid=490034" இலிருந்து மீள்விக்கப்பட்டது