110
கபாடபுரம்
செய்து நமது அரசதந்திரத்தால் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறோமே ஒழிய வேறு பொருள் அந்த உறவுக்கு இல்லை."
"அது உறவா, பகையா, என்பதே இன்னும் விளக்கப்படவில்லையே?"
"விளக்கப்படாமலிருக்கிறவரை தான் சில நிலைமைகளுக்குப் பாதுகாப்பு அதிகம். சில வேளைகளில் அவசரப்பட்டு அவற்றை விளக்கி முடிவு கண்டுவிடுவதுகூடச் சிறுபிள்ளைத் தனமாக முடிந்துவிடும் பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் நமது தேர்க்கோட்டத்தில் அடிமைகளைப்போல் பணிபுரிகிறார்கள். தென்பழந்தீவுகளிலுள்ள வானளாவிய மரங்களிலிருந்து வைரம் பாய்ந்த அடிமரப் பகுதிகளும், பிற சட்டங்களும், நமது தேர்க்கோட்டத்திற்காகக் கிடைக்கின்றன. கபாடபுரத்திற்கும், அந்நிய தேசங்களுக்கும் இடையே இராஜபாட்டையைப்போல பயன்படும் கடல்வழிகள் எல்லாம் இந்தத் தென்பழந்தீவுகளை ஊடறுத்துக் கொண்டே செல்கின்றன. அப்படி இருக்கும்போது இந்தப் பழந்தீவுகளின் அவுணர்களோடு நாம் கொண்டிருப்பது பகையா, உறவா என்பதை அழுத்தி உறைத்துப் பார்த்து விளங்கிக் கொள்ள முயல்வதுகூட அவசியம்தானா என்பதையும் அதன் பலாபலன்களையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்."
"இப்படியே தொடரவிடுவதிலுள்ள பயன் என்னவாக இருக்குமென்று புரியவில்லை."
"பெரிய நன்மைகள் இல்லாவிட்டாலும், தீமைகள் எவையும் இல்லை. நமக்கு வேண்டிய மரங்களும், காய், கனி, கிழங்குகள், அபூர்வமூலிகைகள் முதலியனவுமெல்லாம் இந்தப் பழந்தீவுகளிலிருந்து கிடைத்துவிடுகின்றன. அவர்களும் எப்போதாவது கபாடத்திலிருந்து முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டுபோகிறார்கள். கடல் கோளுக்குப் பின் இந்தப் புதிய கோநகரத்தையும் தேர்க்கோட்டத்தையும், நான் சமைக்க முயன்றபோது பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் உதவியாக இருந்தார்கள். அவர்களோ, அவர்களுடைய