பக்கம்:கபாடபுரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

113


என்பதை இனங்காண முடியாமல் அரைகுறையாக நிற்கும். அவற்றிலிருந்து படிப்பினைகளைத் தேடும் வேளைகளில் மட்டும் அவசரப்பட்டுவிடக் கூடாது. பழந்தீவுகளில் பயணம் செய்யும்போது தேசாந்திரிகளைப்போல் சுற்றித்திரியவேண்டுமே ஒழியக் கபாடபுரத்து அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள்போல் அவர்கள் சந்தேகப்படும்படி நடந்துகொள்ளக்கூடாது. அவ்வாறு சந்தேகப்பட இடங்கொடுத்துவிட்டீர்களானால் நீங்கள் அவர்களைச் சுற்றிப் பார்த்து அறிந்துகொள்ள முடியாமல் அவர்கள் உங்களைச் சுற்றிப் பின்தொடர ஆரம்பித்துவிடுவார்கள். இதில் பலவற்றை முடிநாகன் நன்றாக அறிந்திருப்பதால் தான் அவனை உன்னோடு துணைக்கு அனுப்புகிறேன்" என்றார் பெரியபாண்டியர்.

பழந்தீவுப் பயணத்துக்கு முழுமனத்தோடு இணங்கினான் சாரகுமாரன். பெற்றோர்களிடம் விடைபெற்று வருமாறு அவனை அனுப்பினார் பெரியபாண்டியர். தந்தை அநாகுல பாண்டியர், "போய்வரவேண்டியது அவசியம்தான். போய்வா! ஆனால் உன்னோடு பரிசாகக் கொடுப்பதற்கேற்ற முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டுசெல். பல வேளைகளில் அது உன்னைக் காப்பாற்றும்படி நேரிடலாம்” என்று குறிப்பாக ஒன்றைக் கூறினார். தாய் திலோத்தமையோ அவனுடைய அந்தப் பயணத்தையே மறுத்தாள். அவளுக்குச் சீற்றமே வந்துவிட்டது. "உன் பாட்டனாருக்கு ஏன்தான் இப்படிக் கொடுமையான எண்ணம் வந்ததோ, தெரியவில்லையே? பழந்தீவுகளுக்கு அனுப்புவதற்கு நீதானா அகப்படவேண்டும். முடியாதென்று மறுத்துவிடு குழந்தாய்" என்று சீறினாள் அவள்.

"மறுப்பதற்கில்லை அம்மா! நான் பெரியவருக்கு வாக்குக் கொடுத்து ஒப்புக் கொண்டுவிட்டேன். பெரியபாண்டியருடைய கட்டளையை மறுக்கவேண்டுமென்று என்னால் நினைக்கவும்கூட முடியாது. எனக்கு அரசதந்திர நெறிகளையும், சூழ்ச்சித் திறனையும் கற்பிப்பதற்காக அவர் செய்யும் ஏற்பாட்டை நான் எப்படி மறுக்கமுடியும்? தவறாமல் நானும் முடிநாகனும் பழந்தீவுகளுக்குப் போயே ஆகவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/115&oldid=490040" இலிருந்து மீள்விக்கப்பட்டது