பக்கம்:கபாடபுரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

121


நீலக்கடலினிடையே அந்தத் தீவும் அதிக உயரமில்லாத குன்றுகளும் மனோரம்மியமாகக் காட்சியளித்தன. மரங்களும், இலை தழைகளும், செடி கொடிகளும், நெய் பூசித் துடைத்துப் பளபளப்பாக வைத்தவைபோல் பசுமை மின்னின. தரைப்பகுதி மரங்களின் பசுமைக்கும் இந்தத் தீவுப் பகுதித் தாவரங்களின் பசுமைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது. இந்தப் பசுமையில் ஒருவிதமான செழிப்பும், அடர்த்தியும் மதம் பிடித்ததுபோல் பற்றியிருந்தன. மனிதர்களும் அதேபோல் வலிமை மதம் பிடித்தவர்களாய்த் தோன்றினார்கள். வலிமையையும், திடனையும் காட்டுவதுபோல் கரிய நிறம். வளையம் வளையமாகச் சுருண்ட செம்பட்டை முடி. ஒளி மின்னும் சிறிய கூர்மையான கண்கள். அதிக உயரமில்லாத தோற்றம். சதைப் பிடிப்பு வாய்ந்த திரண்ட தோள்கள். பரந்த மார்பு. வேகமாக ஓடுவதற்கும், துரத்துவதற்கும் ஏற்ப வாய்ந்தவைபோல் இறுக்கமான குதிகால்கள். அத் தீவின் மனிதர்களான எயினர்கள் பார்ப்பதற்கு விநோதமாயிருந்தார்கள். இடுப்பைச் சுற்றி ஒரு சிவப்புநிற மரப்பட்டையைக் கச்சையாக அணிந்திருந்தார்கள்.

இளையபாண்டியனும், முடிநாகனும் தங்கள் பாய்மரக் கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தச் செய்தனர். பாய்களும் கீழே இறக்கிச் சுருட்டி முடியப்பட்டன. கரையில் குன்றினருகே ஒட்டினாற்போலக் கப்பலைக் கொண்டுபோய் நிறுத்த முடியாமையினால் சிறிது தள்ளியே நிறுத்த வேண்டியதாயிற்று. கப்பல் நிறுத்தப்படுவதைப் பார்த்ததும் அதிலிருந்த இளையபாண்டியனோ, முடிநாகனோ கூப்பிடாமல் தாங்களாகவே இரண்டு குரூரமான தோற்றத்தையுடைய குள்ள எயினர்கள் ஒர் சிறு படகில் அதை நோக்கி வந்தனர். எயினர்கள் பேசிய தமிழில் வல்லின ஒலி அதிகமாயிருந்தது. படுத்த குரலில் சொல்லவேண்டிய சொற்களைக் கூட எடுத்த குரலில் வலித்துப் பேசினார்கள். சொற்களைப் பல்லைக் கடித்துக்கொண்டு வெளியிடுவதுபோல் வெளியிடும் சமயங்களில் அவர்களுடைய முகத்தில் பளீரென்று மின்னும் சிறிய கண்கள் பார்ப்பவர்களுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/123&oldid=490049" இலிருந்து மீள்விக்கப்பட்டது