பக்கம்:கபாடபுரம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

கபாடபுரம்


பயமூட்டுகின்றனவையாய் இருந்தன. கரையிலிருந்து கொண்டுவந்த அந்தச் சிறிய படகைக் காண்பித்து, "கீழே இறங்கி இந்தப் படகுக்கு வாருங்கள்" என்பதுபோல் இளையபாண்டியனையும், முடிநாகனையும் நோக்கி அந்தக் குள்ளர்கள் சைகையால் அழைத்தார்கள். தோற்றத்தைக்கண்டு ஏளனமாக எண்ணி அந்தக் குள்ளர்களை அலட்சியம் செய்யவோ அவர்கள் வேண்டுகோளை மறுக்கவோ, கூடாதென்பதுபோல் இளையபாண்டியனுக்குக் குறிப்பாக உணர்த்தினான் முடிநாகன்.

"இவர்கள் இந்தத் தீவிற்குத் தலைவனான வலிய எயினனின் பணியாளர்கள். வலிய எயினனுடைய வார்த்தைக்குத் தீவிலுள்ள பெருமக்கள் அடங்கிக் கட்டுப்படுவார்கள். வலிய எயினர்கள் அரசகுடும்பத்தினரைப்போல் பரம்பரையாகப் பட்டத்துக்கு வந்து தீவின் ஆட்சி உரிமையைப் பெறுகிறவர்கள். தீவுக்கு வருகிற பிறநாட்டினரை இவர்கள் முதலில் வலிய எயினனிடம் அழைத்துக்கொண்டுபோய் நிறுத்திவிடுவார்கள். பாட்டனார் நம்மிடம் கொடுத்து அனுப்பியிருக்கும் அன்பளிப்புப் பொருள்களில் ஒரு பகுதியை இப்போது நம்முடன் எடுத்துக்கொண்டுவிடவேண்டும். மற்றெந்த நாட்டினர் எந்த எந்த அன்பளிப்பைக் கொண்டுவந்து கொடுத்தாலும் கபாடத்து முத்துக்களை அன்பளிப்பாகக் கொண்டு தருகிறவர்களிடம் இவர்கள் தனிப்பிரியம் காட்டுவார்கள் என்று தங்கள் பாட்டனார் கூறியிருக்கிறார் அல்லவா? அந்த உபாயம் இப்போது நமக்குப் பயன்படும் வேளை வந்திருக்கிறது" என்று இளையபாண்டியனின் செவியருகே நெருங்கி மேலும் கூறினான் முடிநாகன்.

ஊழியர்களை எல்லாம் கப்பலிலேயே விட்டுவிட்டு இளைய பாண்டியனும் முடிநாகனும் வலிய எயினனைச் சந்திப்பதற்காகத் தீவிற்குள் அழைத்துச் செல்லவந்த படகில் புறப்பட்டனர். படகு கரையை நெருங்கியதும் - வேறு இரண்டு குள்ளர்கள் தீப்பந்தத்தோடு காத்திருப்பது தெரிந்தது. தீவில் இருள் செறிந்திருந்தது. மேலே வானளாவிய மரங்களும் செடிகொடிகளும், அடர்ந்து படர்ந்திருந்த பகுதியில் நூலிழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/124&oldid=490050" இலிருந்து மீள்விக்கப்பட்டது