பக்கம்:கபாடபுரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

11


தோன்றும். நகரத்தின் ஒருபெரும் பகுதியை இயற்கையே பெரு விருப்பத்தோடு மலர்ச்சரங்களால் அலங்கரித்திருப்பது போல இந்த ஞாழல் மரங்கள் தோற்றமளிக்கும் கபாடபுரத்தில் கிடைத்த முத்துக்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலுமே ஒளியினாலும், தரத்தினாலும் சிறந்திருந்ததன் காரணமாக நல்ல முத்துக்களுக்குப் பெயரே கபாடம் - என்று வைத்திருந்தனர் வெளிநாட்டு வாணிகர். பாண்டியர் கபாடம் - என்றே வெளிநாட்டுக் கவிஞர் யாவரும் இந்நகருக்கு இலக்கியப் புகழ் தந்தனர்.

மிக நீண்ட காலமாகத் தலைநகருக்கு வரவே வாய்ப்பின்றி மணலூரில் பெரும் புலவர்களான அவிநயனாரிடமும், சிகண்டியாரிடமும் இலக்கண இலக்கியங்களைப் பாடங் கேட்டுக் குருகுலவாசம் செய்து வந்த சாரகுமாரன் - இவ்வாண்டு எப்படியும் நிச்சயமாக நகரணிமங்கல நாளில் கோ நகருக்கு வந்துவிட வேண்டுமென்று அன்பாகக் கட்டளையிட்டிருந்தார் பாட்டனார் வெண்தேர்ச் செழியர். பாட்டனாருக்கு இந்தப் பேரப்பிள்ளையின் மேல் கொள்ளை ஆசை. ஒளிநாட்டைச் சேர்ந்த பேரழகி ஒருத்தியைக் காதலித்துக் கடிமணம் புரிந்துகொண்ட அநாகுல பாண்டியனுக்கு மிக இளம் பருவத்தில் பிறந்த செல்வமகன் சாரகுமாரன்.

பெற்றோர்க்கு மிக இளம் பருவத்தில் பிறந்ததனாலும் பெற்றோர் இருவரும் பேரழகு வாய்ந்தவர்களாகவும் கலையுள்ளம் படைத்தவர்களாகவும் இருந்ததனாலும் சாரகுமாரன் குழந்தைமையிலேயே மிகவும் வசீகரமானவனாகவும், பொலிவுடையவனாகவும் இருந்தான். அவனுடைய குழந்தைப் பருவத்தின் அரச குடும்ப வழக்கப்படி அவனுக்கு ஐம்படைத்தாலி அணிந்து நாண்மங்கலம் கொண்டாடியபோது அதனைப் புகழ்ந்து கவி பாடி வாழ்த்த வந்திருந்த புலவர்களுக்கு எல்லாம் நடுவே, "இதுவரை இந்தக் கபாடத்தில் விளைந்த முத்துக்களில் எல்லாம் சிறந்த முத்து இதுதான்" - என்று குழந்தையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/13&oldid=489912" இலிருந்து மீள்விக்கப்பட்டது